(1)
முத்தா, முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா, சித்தித் திறம்காட்டும்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா, பத்தர் பலர்போற்றும்
பரமா, பழையனூர் மேய
அத்தா ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(2)
பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் தன்னைப் போகாமே
மெய்யே வந்திங்கெனையாண்ட
மெய்யா, மெய்யர் மெய்ப்பொருளே
பையாடரவம் அரைக்கசைத்த
பரமா, பழையனூர் மேய
ஐயா, ஆலங்காடா, உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(3)
தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைகளவை தீர்க்கும்
பரமா, பழையனூர் மேய
ஆண்டா, ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(4)
மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையில் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தேன் ஐயாநான்
மையார் கண்டம் உடையானே
பறியா வினைகளவை தீர்க்கும்
பரமா, பழையனூர் மேய
அறிவே, ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(5)
வேலங்காடு தடங்கண்ணார்
வலையுள் பட்டுன் நெறிமறந்து
மாலங்காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங்காடீ நெய்யாடீ
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங்காடா உன்னுடைய
அடியார்க்கடியேன் ஆவேனே
(6)
எண்ணார் தங்கள் எயில்எய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகம் காக்கின்ற
கருத்தா திருத்தலாகாதாய்
பண்ணார் இசைகளவை கொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(7)
வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழையனூர் மேய
அண்டா ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(8)
பேழ்வாய் அரவின் அணையானும்
பெரிய மலர்மேல் உறைவானும்
தாழாது உந்தன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைகளவை தீர்க்கும்
பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(9)
எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டில்
பேயோடாடல் புரிவானே
பன்மா மலர்களவை கொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங்காடா உன்
அடியார்க்கடியேன் ஆவேனே
(10)
பத்தர் சித்தர் பலர்ஏத்தும்
பரமன், பழையனூர் மேய
அத்தன், ஆலங்காடன் தன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்தமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் அடியே பணிவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...