திருவாலங்காடு – அப்பர் தேவாரம் (2):

<– திருவாலங்காடு

(1)
ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே
    ஊழிதோறூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
    நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்றாடும் கூற்றை உதைத்தார் தாமே
    கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(2)
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே
    வானோர் வணங்கப்படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
    சரணென்று இருப்பார்கட்கன்பர் தாமே
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(3)
ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே
    அளவில் பெருமை உடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
    புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாடல் உகப்பார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
தேவுற்ற அடிபரவ நின்றார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(4)
நாறுபூங் கொன்றை முடியார் தாமே
    நான் மறையோடாறங்கம் சொன்னார் தாமே
மாறிலா மேனி உடையார் தாமே
    மாமதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
தேறினார் சித்தத்திருந்தார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(5)
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
    அந்தியும் சந்தியும் ஆனார் தாமே
சொல்லும் பொருளெலாம் ஆனார் தாமே
    தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே
பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(6)
தொண்டாய்ப் பணிவார்க்கணியார் தாமே
    தூநீறணியும்  சுவண்டர் தாமே
தண்தாமரையானும் மாலும் தேடத்
    தழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(7)
மையாரும் கண்ட மிடற்றார் தாமே
    மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக்காவும்
    அம்பலமும் கோயிலாக் கொண்டார் தாமே
பையாடரவம் அசைத்தார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(8)
விண்முழுதும் மண்முழுதும் ஆனார் தாமே
    மிக்கோர்களேத்தும் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே
    காலங்கள் ஊழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாடல் உகப்பார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(9)
காரார் கடல்நஞ்சை உண்டார் தாமே
    கயிலை மலையை உடையார் தாமே
ஊரா ஏகம்பம் உகந்தார் தாமே
    ஒற்றியூர் பற்றியிருந்தார் தாமே
பாரார் புகழப்படுவார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே
(10)
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தியாத
நீலக் கடல்சூழ் இலங்கைக் கோனை
    நெரிய விரலால் அடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page