திருவாலங்காடு – அப்பர் தேவாரம் (1):

<– திருவாலங்காடு

(1)
வெள்ளநீர்ச் சடையர் போலும், விரும்புவார்க்கெளியர் போலும்
உள்ளுளே உருகி நின்றங்குகப்பவர்க்கன்பர் போலும்
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசறுத்திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய ஆலங்காட்டடிகளாரே
(2)
செந்தழல் உருவர் போலும், சினவிடை உடையர் போலும்
வெந்தவெண்ணீறு கொண்டு மெய்க்கணிந்திடுவர் போலும்
மந்தமாம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட்டடிகளாரே
(3)
கண்ணினால் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டடிகளாரே
(4)
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண்தோளர் போலும்
தூறிடு சுடலை தன்னில் சுண்ண வெண்ணீற்றர் போலும்
கூறிடும் உருவர் போலும், குளிர்பொழில் பழனை மேய
ஆறிடு சடையர் போலும் ஆலங்காட்டடிகளாரே
(5)
பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும்
கூர்த்தவாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய திருஆலங்காடனாரே
(6)
வீட்டினார் சுடுவெண்ணீறு மெய்க்கணிந்திடுவர் போலும்
காட்டில் நின்றாடல் பேணும் கருத்தினை உடையர் போலும்
பாட்டினார் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார் அரவம் தன்னை ஆலங்காட்டடிகளாரே
(7)
தாளுடைச் செங்கமலத் தடங்கொள் சேவடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார், குளிர்பொழில் பழனை மேய
ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டடிகளாரே
(8)
கூடினார் உமை தனோடே குறிப்புடை வேடம் கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம், பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டடிகளாரே
(9)
வெற்றரைச் சமணரோடு விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங்கேறும் பெருமையை உடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டடிகளாரே
(10)
மத்தனாய் மலையெடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார் திருவிரலால் ஊன்றியிட்டருள்வர் போலும்
பத்தர்தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டடிகளாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page