திருவாரூர் – சுந்தரர் தேவாரம் (11) – (பொது):

<– திருவாரூர்

 

(திருவாரூரில் பாடிய பொதுத் திருப்பதிகம்)

 

(1)
காட்டூர்க் கடலே, கடம்பூர் மலையே, கானப்பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே, அழுந்தூர் அரசே, கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய், பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா, மறவாதுன்னைப் பாடப் பணியாயே
(2)
கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய், குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா, வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா, அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்டாடீ, அடியார் கவலை களையாயே
(3)
நிறைக்காட்டானே, நெஞ்சத்தானே, நின்றியூரானே
மிறைக்காட்டானே, புனல்சேர் சடையாய், அனல்சேர் கையானே
மறைக்காட்டானே, திருமாந்துறையாய், மாகோணத்தானே
இறைக்காட்டானே எங்கட்குன்னை எம்மான் தம்மானே
(4)
ஆரூர் அத்தா, ஐயாற்றமுதே, அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப்படுவாய், பாசூர் அம்மானே
(5)
மருகல் உறைவாய், மாகாளத்தாய், மதியம் சடையானே
அருகல் பிணி நின்னடியார் மேல் அகல அருளாயே
கருகற் குரலாய், வெண்ணிக் கரும்பே, கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க்குன்னைப், பவளப் படியானே
(6)
தாங்கூர் பிணிநின் அடியார் மேல் அகல அருளாயே
வேங்கூர் உறைவாய், விளமர் நகராய், விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய், தேங்கூர் நகராய், நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே, பரமா, பழனப் பதியானே
(7)
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
ஆனைக்காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே, பரனே, அண்ணாமலையானே
ஊனைக்காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே
(8)
துருத்திச் சுடரே, நெய்த்தானத்தாய், சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத்துறைவாய், வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித்துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே
(9)
புலியூர்ச் சிற்றம்பலத்தாய், புகலூர்ப் போதா, மூதூரா
பொலிசேர் புரமூன்றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவில் கடவூராளீ காண அருளாயே
(10)
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாம் தடங்கண் மதுரமன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான், ஊரன், சடையன் சிறுவன், அடியன் தமிழ்மாலை
செம்மாந்திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page