(1)
கரையும் கடலும் மலையும்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன், உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க்கெல்லாம்
அரையன், இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(2)
தனியன் என்றெள்கி அறியேன்
தன்னைப் பெரிதும் உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(3)
சொல்லில் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(4)
நெறியும் அறிவும் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(5)
நீதியில் ஒன்றும் வழுவேன்
நிர்க்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க்கும் துணையாகேன்
சோதியில் சோதி எம்மானை
சுண்ண வெண்ணீறணிந்திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(6)
அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலையேன், அலந்தார்கள்
ஒருத்தர்க்குதவியேன் அல்லேன்
உற்றவர்க்கும் துணை அல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத்திட்டிடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(7)
சந்தம் பல அறுக்கில்லேன்
சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடையேறி
மூவுலகும் திரிவானே
கந்தம் கமழ் கொன்றை மாலைக்
கண்ணியன், விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(8)
நெண்டிக் கொண்டேயும் கலாய்ப்பேன்
நிச்சயமே இது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலால் பேசேன்
மெய்ப் பொருளன்றி உணரேன்
பண்டங்கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழ்அடர்த்திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(9)
நமர்பிறர் என்பதறியேன்
நான் கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன்
தக்கவாறொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(10)
ஆசை பல அறுக்கில்லேன்
ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலால் பேசேன்
பிழைப்புடையேன் மனம் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமுதுண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர், அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்
(11)
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயும் திறம் வல்லான்
திருமருவும் திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...