திருவாரூர் – சுந்தரர் தேவாரம் (5):

<– திருவாரூர்

 

(1)
குருகு பாயக் கொழும் கரும்புகள் நெரிந்தசாறு
அருகு பாயும் வயல் அந்தண் ஆரூரரைப்
பருகுமாறும் பணிந்தேத்துமாறும் நினைந்து
உருகுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே
(2)
பறக்கும்எம் கிள்ளைகாள், பாடும்எம் பூவைகாள்
அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உறக்கமில்லாமையும் உணர்த்த வல்லீர்களே
(3)
சூழுமோடிச் சுழன்றுழலும் வெண் நாரைகாள்
ஆளும் அம்பொற்கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழுமாறும், வளை கழலுமாறும், எனக்கு
ஊழுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே
(4)
சக்கிரவாகத்திளம் பேடைகாள், சேவல்காள்
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு
வக்கிரமில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உக்கிரமில்லாமையும் உணர்த்த வல்லீர்களே
(5)
இலைகொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்
அலைகொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்குக்
கலைகள் சோர்கின்றதும், கனவளை கழன்றதும்
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே
(6)
வண்டுகாள், கொண்டல்காள், வார்மணல் குருகுகாள்
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக்
கண்டவாறும், காமத்தீக் கனன்றெரிந்து மெய்
உண்டவாறும் இவை உணர்த்த வல்லீர்களே
(7)
தேனலங்கொண்ட தேன் வண்டுகாள், கொண்டல்காள்
ஆனலங்கொண்ட எம்அடிகள் ஆரூரர்க்குப்
பானலங்கொண்ட எம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங்கொண்டதும் உணர்த்த வல்லீர்களே
(8)
சுற்றுமுற்றும் சுழன்றுழலும் வெண்நாரைகாள்
அற்ற முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்குப்
பற்று மற்றின்மையும், பாடு மற்றின்மையும்
உற்று மற்றின்மையும் உணர்த்த வல்லீர்களே
(9)
குரவநாறக் குயில் வண்டினம் பாடநின்று
அரவமாடும் பொழில் அந்தண் ஆரூரரைப்
பரவி நாடும்அதும், பாடிநாடும் அதும்
உருகிநாடும்அதும் உணர்த்த வல்லீர்களே
(10)
கூடும் அன்னப் பெடைகாள், குயில் வண்டுகாள்
ஆடும் அம்பொற்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடுமாறும், பணிந்தேத்துமாறும், கூடி
ஊடுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே
(11)
நித்தமாக நினைந்து உள்ளமேத்தித் தொழும்
அத்தன் அம்பொற்கழல் அடிகள் ஆரூரரைச்
சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடிஅப்பன், மெய்ப்
பத்தன் ஊரன் சொன்ன பாடுமின் பத்தரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page