(திருவாரூரில் பாடிய பொதுத் திருப்பதிகம்)
(1)
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந்தான், இடம் கொண்டது கோவலூர்
தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம்
வாழை காய்க்கும் வளர்மருகல் நன்னாட்டு மருகலே
(2)
அண்டத்தண்டத்தின் அப்புறத்தாடும் அமுதன்ஊர்
தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை
கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே
(3)
மூலனூர் முதலாய முக்கண்ணன் முதல்வன்ஊர்
நாலனூர், நரை ஏறுகந்தேறிய நம்பன் ஊர்
கோலநீற்றன் குற்றாலம், குரங்கணில் முட்டமும்
வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே
(4)
தேங்கூரும் திருச்சிற்றம்பலமும், சிராப்பள்ளி
பாங்கூர், எங்கள் பிரானுறையும் கடம்பந்துறை
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே
(5)
குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறனாம்
மழலையேற்று மணாளன் இடம் தடமால் வரைக்
கிழவன் கீழைவழி, பழையாறு, கிழையமும்
மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே.
(6)
தென்னூர் கைம்மைத் திருச்சுழியல், திருக்கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பரமற்கிடம் பாய்நலம்
என்னூர், எங்கள் பிரான்உறையும் திருத்தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே
(7)
ஈழ நாட்டு மாதோட்டம், தென்னாட்டின் ராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கிடம் கிள்ளிகுடியதே
(8)
நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர்
நீள நீள்சடையான் நெல்லிக்காவும், நெடுங்களம்
காளகண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர்
வேளா நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே
(9)
தழலு மேனியன், தையலொர் பாகம் அமர்ந்தவன்
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம்
பழனம், பாம்பணி பாம்புரம், தஞ்சை தம் சாக்கையே
(10)
மைகொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி
பைகொள் வாளரவாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துகளும் திருப்புன்கூர், நன்று
ஐயன் மேய பொழிலணி ஆவடுதுறையதே
(11)
பேணி நாடதனில் திரியும் பெருமான் தனை
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகைஅப்பன் வன்தொண்டன் சொல்
பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...