(1)
இறைகளோடிசைந்த இன்பம், இன்பத்தோடிசைந்த வாழ்வு
பறை கிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினேற்குத்
திறை கொணர்ந்தீண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(2)
ஊன்மிசை உதிரக் குப்பை, ஒரு பொருளிலாத மாயம்
மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல் வெள்ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(3)
அறுபதும் பத்தும் எட்டும், ஆறினோடஞ்சும் நான்கும்
துறு பறித்தனைய நோக்கிச் சொல்லில் ஒன்றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும் நாள்தொறும் வணங்குவாருக்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(4)
சொல்லிடில் எல்லை இல்லை, சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தேன் அல்லேன்
மல்லிகை மாடநீடு, மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லிவண் தயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(5)
நரம்பினோடு எலும்பு கட்டி, நசையினோடு இசைவொன்றில்லாக்
குரம்பை வாய்க் குடியிருந்து, குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதியென்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(6)
மணமென மகிழ்வர் முன்னே, மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே, பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலைதோறும் பைம்பொழில் விளாகத்தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(7)
தாழ்வெனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கொன்றீயகில்லார்
ஆழ்குழிப்பட்ட போது அலக்கணில் ஒருவர்க்காவர்
யாழ் முயன்றிருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(8)
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடிக் கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(9)
பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய்யென்றெண்ணும்
வித்தகத்தாய வாழ்வு வேண்டிநான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்குவாருக்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
(10)
தஞ்சொலார் அருள்பயக்கும் தமியனேன் தடமுலைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாம் கண்டத்தெங்கள் நாதனை நணுகுவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...