திருவாரூர் – சுந்தரர் தேவாரம் (7):

<– திருவாரூர்

 

(1)
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
    போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறிவொண்ணா
    எம்மானை, எளி வந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத் தணி
    ஆரூரானை மறக்கலுமாமே
(2)
கட்டமும் பிணியும் களைவானைக்
    காலன் சீறிய காலுடையானை
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை
    விரவினால் விடுதற்கரியானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
    வாராமே தவிரப் பணிப்பானை
அட்ட மூர்த்தியை, மட்டவிழ் சோலை
    ஆரூரானை மறக்கலுமாமே
(3)
கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானைக்
    கலைக்கெலாம் பொருளாய் உடன் கூடிப்
பார்க்கின்ற உயிர்க்குப் பரிந்தானைப்
    பகலும் கங்குலுமாகி நின்றானை
ஓர்க்கின்ற செவியைச், சுவை தன்னை
    உணரும் நாவினைக், காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்ற கடலை, மலை தன்னை
    ஆரூரானை மறக்கலுமாமே
(4)
செத்த போதினில் முன்னின்று நம்மைச்
    சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தை உண்டே, மனமுண்டே
    மதியுண்டே, விதியின் பயனுண்டே
முத்தன் எங்கள் பிரானென்று வானோர்
    தொழ நின்ற திமில் ஏறுடையானை
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை
    ஆரூரானை மறக்கலுமாமே
(5)
செறிவுண்டேல், மனத்தால் தெளிவுண்டேல்
    தேற்றத்தால் வரும் சிக்கன உண்டேல்
மறிவுண்டேல், மறுமைப் பிறப்புண்டேல்
    வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை
    பொன்போலும் சடைமேல் புனைந்தானை
அறிவுண்டே, உடலத்துயிருண்டே
    ஆரூரானை மறக்கலுமாமே
(6)
பொள்ளல் இவ்வுடலைப் பொருளென்று
    பொருளும் சுற்றமும் போகமுமாகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
    வாராமே தவிர்க்கும் விதியானை
வள்ளல் எந்தமக்கே துணையென்று
    நாணாளும் அமரர் தொழுதேத்தும்
அள்ளலம் கழனிப் பழனத் தணி
    ஆரூரானை மறக்கலுமாமே
(7)
கரியானை உரிகொண்ட கையானைக்
    கண்ணின் மேல் ஒரு கண்ணுடையானை
வரியானை, வருத்தம் களைவானை
    மறையானைக், குறை மாமதி சூடற்கு
உரியானை, உலகத்துயிர்க்கெல்லாம்
    ஒளியானை, உகந்துள்கி நண்ணாதார்க்கு
அரியானை, அடியேற்கெளியானை
    ஆரூரானை மறக்கலுமாமே
(8)
வாளா நின்று தொழும் அடியார்கள்
    வானாளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணாளும் மலரிட்டு வணங்கார்
    நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன்
    கிளைக்கெலாம் துணையாம் எனக்கருதி
ஆளாவான் பலர் முன்பு அழைக்கின்றேன்
    ஆரூரானை மறக்கலுமாமே
(9)
விடக்கையே பெருக்கிப் பல நாளும்
    வேட்கையால் பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன்
    கண்குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்கிலேன், பரவைத் திரைக் கங்கைச்
    சடையானை, உமையாளைஓர் பாகத்து
அடக்கினானை, அந்தாமரைப் பொய்கை
    ஆரூரானை மறக்கலுமாமே
(10)
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட
    உச்சிப் போதனை, நச்சரவார்த்த
பட்டியைப், பகலை, இருள் தன்னைப்
    பாவிப்பார் மனத்தூறும் அத்தேனைக்
கட்டியைக், கரும்பின் தெளிதன்னைக்
    காதலால் கடற்சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனைப், பட்டனைச், செல்வ
    ஆரூரானை மறக்கலுமாமே
(11)
ஓரூர் என்று உலகங்களுக்கெல்லாம்
    உரைக்கலாம் பொருளாய் உடன் கூடிக்
காரூரும் கமழ் கொன்றை நன்மாலை
    முடியன், காரிகை காரணமாக
ஆரூரை மறத்தற்கரியானை
    அம்மான்தன் திருப்பேர் கொண்ட தொண்டன்
ஆரூரன் அடிநாய் உரை வல்லார்
    அமரலோகத்திருப்பவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page