திருவாரூர் – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவாரூர்

(1)
சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ முத்தியாகுமே
(2)
பிறவி அறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவாதேத்துமின், துறவியாகுமே
(3)
துன்பம் துடைப்பீர்காள், அன்பன் அணிஆரூர்
நன்பொன் மலர்தூவ இன்பமாகுமே
(4)
உய்யல் உறுவீர்காள்; ஐயன் ஆரூரைக்
கையினால் தொழ நையும் வினைதானே
(5)
பிண்டம் அறுப்பீர்காள் , அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே.
(6)
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ நேசமாகுமே
(7)
வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ வையம் அமுதாமே
(8)
அரக்கன் ஆண்மையை நெருக்கினான், ஆரூர்
கரத்தினால் தொழத் திருத்தமாகுமே
(9)
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளும் அவர்தம்மேல் விள்ளும் வினைதானே
(10)
கடுக்கொள் சீவரை அடக்கினான், ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே
(11)
சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page