(1)
பருக்கையானை மத்தகத்தரிக் குலத்துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பன்ஊர்
கருக்கொள் சோலை சூழநீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்தணாவும் அந்தண் ஆரூர் என்பதே
(2)
விண்ட வெள்ளெருக்கு அலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செஞ்சடைமுடிச் சிவன்இருந்த ஊர்
கெண்டை கொண்டலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசைபோய்
அண்டர் அண்டம் ஊடறுக்கும் அந்தண் ஆரூர் என்பதே
(3)
கறுத்த நஞ்சம் உண்டிருண்ட கண்டர், காலன் இன்னுயிர்
மறுத்த மாணி தன்றன்ஆகம் வண்மை செய்த மைந்தன்ஊர்
வெறித்து மேதியோடி மூசு வள்ளை வெள்ளை நீள்கொடி
அறுத்து மண்டி ஆவிபாயும் அந்தண் ஆரூர் என்பதே
(4)
அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னும்ஊர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே
(5)
சங்குலாவு திங்கள்சூடி, தன்னை உன்னுவார் மனத்து
அங்குலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும்ஊர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி அண்டநாறும் அந்தண் ஆரூர் என்பதே
(6)
கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டருத்தியோடு
உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான் உகந்தஊர்
துள்ளிவாளை பாய்வயல் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தண் ஆரூர் என்பதே
(7)
கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னும்ஊர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தண் ஆரூர் என்பதே
(8)
வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் உரத்தொடும்
நெரித்தவன், புரத்தைமுன் எரித்தவன் இருந்தஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே
(9)
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண்பறந்து, மெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தஊர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகம் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தண் ஆரூர் என்பதே
(10)
பறித்த வெண்தலைக் கடுப்படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன், வேலை நஞ்சமுண்ட கண்டன் மேவும்ஊர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செந்நெல்
அறுத்தவாய் அசும்பு பாயும் அந்தண் ஆரூர் என்பதே
(11)
வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லி மாதமர்ந்திருந்த அந்தண் ஆரூர்ஆதியை
நல்லசொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானம்ஆள வல்லர் வாய்மையாகவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...