(1)
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன், மனம் புகுந்தாய், கழலடி
பூண்டு கொண்டொழிந்தேன், புறம் போயினால் அறையோ
ஈண்டு மாடங்கள் நீண்டமாளிகை மேலெழு கொடி வானிளம் மதி
தீண்டி வந்துலவும் திருவாரூர் அம்மானே
(2)
கடம்பட நடமாடினாய், களைகண் நினக்கொரு காதல் செய்துஅடி
ஒடுங்கி வந்தடைந்தேன், ஒழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால் முதுநீர் மலங்கிள வாளை, செங்கயல் சேல்வரால் களிறு
அடைந்த தண்கழனி அணியாரூர் அம்மானே
(3)
அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார், உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே
(4)
பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன், என்ன குறையுடையேன்
ஓங்கு தெங்கிலையார் கமுகிள வாழை மாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே
(5)
நீறுசேர் செழு மார்பினாய், நிரம்பா மதியொடு நீள் சடையிடை
ஆறுபாய வைத்தாய், அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பி அஞ்சிறகூன்ற விண்ட மலரிதழ் வழி
தேறல் பாய்ந்தொழுகும் திருவாரூர் அம்மானே
(6)
அளித்து வந்தடி கைதொழுமவர் மேல்வினை கெடும், என்று இவையகம்
களித்து வந்துடனே கலந்தாடக் காதலராய்க்
குளித்து மூழ்கியும் தூவியும் குடைந்தாடு கோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்கும் தீர்த்தமறாத் திருவாரூர் அம்மானே
(7)
திரியும் மூவெயில் தீயெழச்சிலை வாங்கி நின்றவனே, என் சிந்தையுள்
பிரியுமாறு எங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்த சாலி திப்பியம் என்று இவையகத்து
அரியும் தண்கழனி அணியாரூர் அம்மானே
(8)
பிறத்தலும், பிறந்தால் பிணிப்பட வாய்ந்தசைந்து உடலம் புகுந்துநின்று
இறக்குமாறுளதே, இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக் குரோத நீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூர் அம்மானே
(9)
முளைத்த வெண்பிறை மொய்சடை உடையாய், எப்போதும்என் நெஞ்சிடம் கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன், வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன் போய்ப் புகுதந்த காலமும் கண்டு தன்பெடை
திளைக்கும் தண்கழனித் திருவாரூர் அம்மானே
(10)
நாடினார் கமலம் மலர்அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூர் அம்மானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...