(1)
பாடிளம் பூதத்தினானும், பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
கூடிள மென்முலையாளைக் கூடிய கோலத்தினானும்
ஓடிள வெண்பிறையானும், ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடிளம் பாம்பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(2)
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும், விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்தானை முன்னோட, முன் பணிந்தன்பர்களேத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(3)
நீறுமெய் பூசவல்லானும், நினைப்பவர் நெஞ்சத்துளானும்
ஏறுகந்தேற வல்லானும், எரிபுரை மேனியினானும்
நாறு கரந்தையினானும், நான்மறைக் கண்டத்தினானும்
ஆறு சடைக் கரந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(4)
கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்
செம்புநல் கொண்டெயில் மூன்றும் தீயெழக் கண் சிவந்தானும்
வம்புநல் கொன்றையினானும், வாள்கண்ணி வாட்டமதெய்த
அம்பர ஈருரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(5)
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சியுள்ளானும்
தாழிளம் செஞ்சடையானும், தண்ணமர் திண்கொடியானும்
தோழியர் தூதிடைஆடத், தொழுதடியார்கள் வணங்க
ஆழிவளைக் கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(6)
ஊர்திரை வேலையுள்ளானும், உலகிறந்து ஒண்பொருளானும்
சீர்தரு பாடல்உள்ளானும், செங்கண் விடைக்கொடியானும்
வார்தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(7)
தொழற்கங்கை துன்னி நின்றார்க்குத் தோன்றிஅருள வல்லானும்
கழற்கங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள்வைத்துக் கோலச்சடைக் கரந்தானும்
அழல்அங்கை ஏந்தவல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(8)
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(9)
வீடரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடரங்காக வைத்தானும், ஓங்கியொர் ஊழியுள்ளானும்
காடரங்கா மகிழ்ந்தானும், காரிகையார் கண்மனத்துள்
ஆடரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
(10)
பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கையஞ்சு நான்குடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சினப் புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...