திருவாரூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருவாரூர்

(1)
குலம்பலம்பா வரு குண்டர் முன்னே நமக்குண்டு கொலோ
அலம்பலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம்பா வரு சேவடியான் திருமூலட்டானம்
புலம்பலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(2)
மற்றிடமின்றி மனை துறந்தல்லுணா வல்லமணர்
சொல் திடமென்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனொடன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங்கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(3)
ஒருவடிவின்றி நின்றுண் குண்டர்முன் நமக்குண்டு கொலோ
செருவடி வெஞ்சிலையால் புரம்அட்டவன், சென்றடையாத்
திருவுடையான், திருவாரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொருவிடையான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(4)
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரைவிட்டு
ஈசனையே நினைந்தேசறுவேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலட்டானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(5)
அருந்தும் பொழுதுரையாடா அமணர் திறமகன்று
வருந்தி நினைந்து அரனேஎன்று வாழ்த்துவேற்குண்டு கொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(6)
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணும் மூடர்முன்னே நமக்குண்டு கொலோ
தேங்கமழ் சோலைத் தென்ஆரூர்த் திருமூலட்டானன் செய்ய
பூங்கழலான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(7)
பண்ணிய சாத்திரப் பேய்கள், பறிதலைக் குண்டரைவிட்டு
எண்ணில்புகழ் ஈசன் தன்னருள் பெற்றேற்கும் உண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன்தன் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(8)
கரப்பர்கள் மெய்யைத், தலைபறிக்கச் சுகமென்னும் குண்டர்
உரைப்பன கேளாதிங்குய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(9)
கையிலிடு சோறு நின்றுண்ணும் காதல் அமணரைவிட்டு
உய்யு நெறி கண்டிங்குய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய்யன்பிலா அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
(10)
குற்றமுடைய அமணர் திறமது கையகன்றிட்டு
உற்ற கருமம் செய்துய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன் தன்வலி வாட்டுவித்த
பொற்கழலான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page