திருவாரூர் – அப்பர் தேவாரம் (20):

<– திருவாரூர்

 

(1)
பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
    புண்ணியங்காள் தீவினைகாள், திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
    இல்லையே கிடந்ததுதான், யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ணல் ஆரூர்த்
    தடங்கடலைத், தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான்தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்மின்னே
(2)
ஐம்பெருமா பூதங்காள், ஒருவீர் வேண்டிற்று
    ஒருவீர் வேண்டீர், ஈண்டவனியெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்கு
    இல்லையே நுகர்போகம், யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகேழாகி
    ஒள்ளாரூர் நள்அமிர்தாம், வள்ளல், வானோர்
தம்பெருமானாய் நின்ற அரனைக் காண்பேன்
    தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன் மின்னே
(3)
சில்லுருவில் குறியிருத்தி நித்தல் பற்றிச்
    செழுங்கண்ணால் நோக்குமிது ஊக்கமன்று
பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
    பளகீர்உம் வசமன்றே பாரேர் எல்லாம்
சொல்லுருவில் சுடர்மூன்றாய், உருவம் மூன்றாய்த்
    தூநயனம் மூன்றாகி, ஆண்ட ஆரூர்
நல்லுருவில் சிவனடியே அடைவேன், நும்மால்
    நமைப்புண்ணேன், கமைத்துநீர் நடமின்களே
(4)
உன்னுருவில் சுவையொளி ஊறோசை நாற்றத்
    துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
மன்னுருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கு ஐயோ
    வையகமே போதாதே, யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
    புவிக்கெழிலாம் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை, எந்தை தன்னைத்
    தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே
(5)
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்து இவ்வுலகமெல்லாம்
    உழறுமிது குறை முடிப்பீர்க்கரிதே, எந்தன்
வைப்பினைப், பொன் மதிலாரூர் மணியை, வைகல்
    மணாளனை, எம் பெருமானை, வானோர் தங்கள்
அப்பனைச் செப்பிட அடைவேன், நும்மால் நானும்
    ஆட்டுணேன், ஒட்டந்தீங்கலையேன் மின்னே
(6)
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
    குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை எல்லாம்
    உழறுமிது குறை முடிப்பீர்க்கரிதே, யானேல்
அங்கமலத்தயனொடு மாலாகி மற்றும்
    அதற்கப்பால் ஒன்றாகி அறியவொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை, ஆரூர்ச்
    செல்வனைச் சேர்வேன், நும்மால் செலுத்துணேனே
(7)
இடர்பாவம் எனமிக்க துக்க வேட்கை
    வெறுப்பே என்றனைவீரும் உலகையோடிக்
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள்
    குறி நின்றதமையாதே, யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்றும் எரிசெய்தானை
    அமரர்கள்தம் பெருமானை, அரனை, ஆரூர்
உடையானைக் கடுகச் சென்றடைவேன், நும்மால்
    ஆட்டுணேன், ஓட்டந்தீங்கலையேன் மின்னே
(8)
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
    வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு
    இல்லையே நுகர்போகம், யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
    கற்பகத்தைத், தற்பரத்தைத், திருவாரூரில்
பரஞ்சோதி தனைக் காண்பேன், படேன்நும் பண்பில்
    பரிந்தோடி ஓட்டந்து பகட்டன் மின்னே
(9)
மூள்வாய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச
    முகரிகாண் முழுதும் இவ்வுலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை
    நடாத்துகின்றீர்க்கு அமையாதே, யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
    நெடுந்தூணைப், பாதாளக் கருவை, ஆரூர்
ஆள்வானைக் கடுகச் சென்றடைவேன், நும்மால்
    ஆட்டுணேன், ஓட்டந்தீங்கலையேன் மின்னே
(10)
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
    துப்பறை என்றனைவீர் இவ்வுலகை ஓடிச்
செருக்கி மிகை செலுத்தியும செய்கை வைகல்
    செய்கின்றீர்க்கு அமையாதே, யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகம்
    தளரஅடி எடுத்தவன்தன் பாடல் கேட்டு
இரக்கம் எழுந்தருளியஎம் பெருமான் பாதத்து
    இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page