(1)
இடர்கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையாய் என்றும்
சுடரொளியாய் உள்விளங்கு சோதீ என்றும்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா என்றும்
கடல் விடமதுண்டிருண்ட கண்டா என்றும்
கலைமான் மறியேந்து கையா என்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
(2)
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம்
சிந்தித்தே நெஞ்சமே திண்ணமாகப்
பொடியேறு திருமேனி உடையாய் என்றும்
புரந்தரன் தன் தோள்துணித்த புனிதா என்றும்
அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும்
அம்மானே ஆருரெம் அரசே என்றும்
கடிநாறு பொழில் கச்சிக் கம்பா என்றும்
கற்பகமே என்றென்றே கதறா நில்லே
(3)
நிலை பெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
(4)
புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம்
நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும்
நுந்தாத ஒண்சுடரே என்றும்நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும்
எழில்ஆரூரா என்றே ஏத்தா நில்லே
(5)
இழைத்த நாள்எல்லை கடப்பதென்றால்
இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலும் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுன் அரணம் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்
குழற்சடைஎம் கோனென்றும் கூறு நெஞ்சே
குற்றமில்லை என்மேல்நான் கூறினேனே
(6)
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்தமாகச்
சேப்பிரியா வெல்கொடியினானே என்றும்
சிவலோக நெறிதந்த சிவனே என்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி என்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்கும்
திருவாரூரா என்றே சிந்தி நெஞ்சே
(7)
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்
பொழில்ஆரூரா என்றே போற்றா நில்லே
(8)
மதிதரு வன்நெஞ்சமே உஞ்சு போக
வழியாவதிது கண்டாய், வானோர்க்கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ என்றும்
அம்மானே ஆரூரெம் ஐயா என்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே என்றென்றே கதறா நில்லே
(9)
பாசத்தைப் பற்றறுக்கல் ஆகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத்தொளி விளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட்டானா என்றும்
நேசத்தை நீபெருக்கி நேர் நின்றுள்கி
நித்தலும் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்று இமையோர்ஏறே என்றும்
எம்பெருமான் என்றென்றே ஏத்தா நில்லே
(10)
புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரூர் இடம் கொண்ட எந்தாய் என்றும்
நலங்கொள் அடி என்தலைமேல் வைத்தாய் என்றும்
நாள்தோறும் நவின்றேத்தாய் நன்மையாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...