(1)
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(2)
நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்தோறும்
பிணிதான் தீருமென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(3)
வீதிகள்தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர் மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள்
ஆதிஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(4)
குணங்கள் பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(5)
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்
கலவ மஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந்து
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(6)
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம் மாண்பிலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(7)
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(8)
முடிகள் வணங்கி மூவாதார் கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(9)
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(10)
பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடலறாத செம்மாப்பார்ந்து
ஓரூர் ஒழியாதுலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...