திருவாரூர் – அப்பர் தேவாரம் (16):

<– திருவாரூர்

 

(1)
திருமணியைத் தித்திக்கும் தேனைப் பாலைத்
    தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக், குழல்மொந்தை தாளம் வீணை
    கொக்கரையின் சச்சரியின் பாணியானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
    பருப்பதத்தில் அருங்கலத்தைப், பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(2)
பொன்னேபோல் திருமேனி உடையான் தன்னைப்
    பொங்கு வெண்ணூலானைப் புனிதன் தன்னை
மின்னானை, மின்னிடையாள் பாகன் தன்னை
    வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பார் இல்லாதானைத்
    தத்துவனை, உத்தமனைத், தழல்போல் மேனி
அன்னானை, ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(3)
ஏற்றானை, ஏழுலகும் ஆனான் தன்னை
    ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான் தன்னைக்
கூற்றானைக், கூற்றம் உதைத்தான் தன்னைக்
    கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக்
காற்றானைத் தீயானை நீருமாகிக்
    கடிகமழும் புன்சடைமேல் கங்கை வெள்ள
ஆற்றானை, ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(4)
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை
    மூவாத மேனிமுக் கண்ணினானைச்
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானைச்
    சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை
    மறுமையும் இம்மையும் ஆனான் தன்னை
அந்திரனை ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(5)
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞகனுமாய்ப்
    பித்தனாய்ப், பத்தர் மனத்தினுள்ளே
உறநெறியாய், ஓமமாய் ஈமக் காட்டில்
    ஓரிபல விடநட்டம் ஆடினானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்றமாகி
    நாற்றமாய் நன்மலர்மேல் உறையா நின்ற
அறநெறியை, ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(6)
பழகிய வல்வினைகள் பாற்றுவானைப்
    பசுபதியைப் பாவகனைப், பாவம் தீர்க்கும்
குழகனைக், கோளரவொன்றாட்டுவானைக்
    கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை
    விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை
அழகனை ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(7)
சூளா மணிசேர் முடியான் தன்னைச்
    சுண்ண வெண்ணீறணிந்த சோதியானைக்
கோள்வாய் அரவம் அசைத்தான் தன்னைக்
    கொல்புலித் தோலாடைக் குழகன் தன்னை
நாள்வாயும் பத்தர் மனத்துளானை
    நம்பனை நக்கனை முக்கணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(8)
முத்தினை மணிதன்னை மாணிக்கத்தைத்
    மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லேறூர்ந்து
    கோளரவொன்றாட்டும் குழகன் தன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்துளானைப்
    பரிதிபோல் திருமேனி உடையான் தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(9)
பையாடு அரவங்கை ஏந்தினானைப்
    பரிதிபோல் திருமேனிப் பால்நீற்றானை
நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை
    நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித்தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப்பானைச்
    செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை
ஐயாறு மேயானை ஆரூரானை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே
(10)
சீரார் முடிபத்துடையான் தன்னைத்
    தேசழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
    பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
    புண்ணியனை, வெண்ணீறணிந்தான் தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான் தன்னை
    அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page