(1)
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான் காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலையான் காண்
வளர்மதிசேர் கண்ணியன் காண், வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலும் எரிசெய்தான் காண்
அனலாடி ஆனஞ்சும் ஆடினான் காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(2)
அக்குலாம் அரையினன் காண், அடியார்க்கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியும் கூரரவும் நீரும் சென்னித்
தொக்குலாம் சடையினன் காண், தொண்டர் செல்லும்
தூநெறி காண், வானவர்கள் துதி செய்தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(3)
நீரேறு சடைமுடிஎம் நிமலன் தான் காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண்
வாரேறு வனமுலையாள் பாகத்தான் காண்
வளர்மதிசேர் சடையான் காண், மாதேவன் காண்
காரேறு முகிலனைய கண்டத்தான் காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லினான் காண்
சீரேறு மணிமாடத் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(4)
கானேறு களிற்றுரிவைப் போர்வையான் காண்
கற்பகம் காண், காலனைஅன்று உதைசெய்தான் காண்
ஊனேறு முடைதலையில் பலிகொள்வான் காண்
உத்தமன் காண், ஒற்றியூர் மேவினான் காண்
ஆனேறொன்றது ஏறும் அண்ணல்தான் காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான் காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(5)
பிறப்போடு இறப்பென்றும் இல்லாதான் காண்
பெண்ணுருவோடாணுருவம் ஆயினான் காண்
மறப்படும்என் சிந்தை மருள் நீக்கினான் காண்
வானவரும் அறியாத நெறி தந்தான் காண்
நறப்படு பூமலர்தூபம் தீப நல்ல
நறுஞ்சாந்தம் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(6)
சங்கரன் காண், சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண்
தருணேந்து சேகரன் காண், தலைவன் தான் காண்
அங்கமலத்தயன் சிரங்கள் ஐந்திலொன்றை
அறுத்தவன் காண், அணிபொழில்சூழ் ஐயாற்றான் காண்
எங்கள் பெருமான் காண், என்இடர்கள் போக
அருள்செய்யும் இறைவன் காண், இமையோர் ஏத்தும்
செங்கமல வயல்புடைசூழ் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(7)
நன்றருளித் தீதகற்றும் நம்பிரான் காண்
நான்மறையோடாறங்கம் ஆயினான் காண்
மின்திகழும் சோதியன் காண், ஆதி தான் காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியினான் காண்
துன்றுபொழில் கச்சிஏகம்பன் தான் காண்
சோற்றுத்துறையான் காண், சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழும் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(8)
பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையினான் காண்
புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகத்தான் காண்
வேதியன் காண், வெண்புரிநூல் மார்பினான் காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தினான் காண்
கோலமா நீறணிந்த மேனியான் காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(9)
விண்டவர்தம் புரமூன்றும் எரிசெய்தான் காண்
வேலைவிடம் உண்டிருண்ட கண்டத்தான் காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கினான் காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண்
புண்டரிகக் கண்ணானும், பூவின் மேலைப்
புத்தேளும் காண்பரிய புராணன் தான் காண்
தெண்திரைநீர் வயல்புடைசூழ் திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
(10)
செருவளரும் செங்கண்மால் ஏற்றினான் காண்
தென்ஆனைக்காவன் காண், தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்றும் எரிசெய்தான் காண்
வஞ்சகர்பால் அணுகாத மைந்தன் தான் காண்
அருவரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளும் நெரிந்தலற அன்று
திருவிரலால் அடர்த்தவன் காண், திருவாரூரில்
திருமூலட்டானத்தெம் செல்வன் தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...