(1)
பாதித்தன் திருவுருவில் பெண் கொண்டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித்தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண்டானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடல் அட்டானைச்
சோதிச் சந்திரன் மேனி மறுச்செய்தானைச்
சுடரங்கி தேவனைஓர் கைக்கொண்டானை
ஆதித்தன் பல்கொண்ட அம்மான் தன்னை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
(2)
வெற்புறுத்த திருவடியால் கூற்றட்டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத்தொருவன் தன்னை
ஓதாதே வேதம் உணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை
அமுதுண்டார் உலந்தாலும் உலவாதானை
அப்புறுத்த நீரகத்தே அழலானானை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
(3)
ஒருகாலத்தொரு தேவர் கண்கொண்டானை
ஊழிதோறூழி உயர்ந்தான் தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடல் அட்டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வையானைப்
புள்ளரையன் உடல்தன்னைப் பொடி செய்தானை
அருவேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
(4)
மெய்ப்பால் வெண்ணீறணிந்த மேனியானை
வெண்பளிங்கின் உட்பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை
உத்தமனை, நித்திலத்தை, உலகமெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப்பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை
அப்பாலைக்கப்பாலைக்கு அப்பாலானை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
(5)
பிண்டத்தில் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப், பெரிய வேதத்
துண்டத்தில் துணிபொருளைச், சுடுதீயாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாராய் இற்றைக்
கண்டத்தில் தீதில் நஞ்சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக்கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
(6)
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியமமாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்ப்
பரமாணுவாய்ப் பழுத்த பண்களாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைகளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரில் கண்டடியேன் அயர்த்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...