திருவாரூர் – அப்பர் தேவாரம் (10):

<– திருவாரூர்

 

(1)
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்போதும் பொனின் மேனிச் சிவனவன்
அப்போதைக்கஞ்சல் என்னும் ஆரூரனே
(2)
சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகிலா அரவை அரையார்த்தவர்
படையின் நேர் தடங்கண் உமைபாகமா
அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே
(3)
விண்ட வெண்தலையே கலனாகவே
கொண்டு அகம்பலி தேரும் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கருளும் ஆரூரரே
(4)
விடையும் ஏறுவர், வெண்தலையில் பலி
கடைகள் தோறும் திரியும்எம் கண்ணுதல்
உடையும் சீரை, உறைவது காட்டிடை
அடைவர் போல் அரங்காக ஆரூரரே
(5)
துளைக்கை வேழத்துரி உடல் போர்த்தவர்
வளைக்கையாளை ஒர் பாக மகிழ்வெய்தித்
திளைக்கும் திங்கள் சடையில் திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே
(6)
பண்ணின் இன்மொழியாளை ஒர் பாகமா
விண்ணினார் விளங்கும் மதி சூடியே
சுண்ண நீறு மெய்ப்பூசிச் சுடலையின்
அண்ணியாடுவர் போலும் ஆரூரரே
(7)
மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்தேறும் இறைவனார்
கட்டுவாங்கம் கனல்மழு மான் தனோடு
அட்டமாம் புயமாகும் ஆரூரரே
(8)
தேய்ந்த திங்கள் கமழ்சடையன், கனல்
ஏந்தி எல்லியுளாடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே
(9)
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கியங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன், கூரெரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே
(10)
மாலு நான்முகனும் அறிகிற்கிலார்
காலனாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு ஏந்திய கையினார்
ஆலமுண்ட அழகாய ஆரூரரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page