திருவாரூர் – அப்பர் தேவாரம் (11):

<– திருவாரூர்

 

(1)
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்துடன் கூத்தராய்
அக்கினோடு அரவார்ப்பர் ஆரூரரே
(2)
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவையாய பராபரன்
அந்தமில் புகழ் ஆரூர்அரனெறி
சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே
(3)
வண்டுலா மலர் கொண்டு வளர்சடைக்கு
இண்டை மாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டராகித் தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம்ஆளவும் வைப்பர் ஆரூரரே
(4)
துன்பெலாம் அற நீங்கிச் சுபத்தராய்
என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்திநின்று
இன்பராய் நினைந்தென்றும் இடையறா
அன்பராம் அவர்க்கன்பர் ஆரூரரே
(5)
முருட்டு மெத்தையில் முன்கிடத்தா முனம்
அரட்டர் ஐவரை ஆசறுத்திட்டு நீர்
முரட்டடித் தவத் தக்கன் தன் வேள்வியை
அரட்டடக்கி தன் ஆரூர் அடைமினே
(6)
எம் ஐயார்இலை, யானும் உளேன்அலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக்கு என்றென்று அரற்றினேற்கு
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே
(7)
தண்ட ஆளியைத் தக்கன்தன் வேள்வியைச்
செண்டதாடிய தேவர் அகண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித்து அன்பதாய்க்
கொண்டி ஆயினவாறு எந்தன் கோதையே
(8)
இவள் நமைப்பல பேசத் தொடங்கினாள்
அவணம் அன்றெனில் ஆரூர் அரனெனும்
பவனி வீதிவிடங்கனைக் கண்டிவள்
தவனிஆயினவாறு எந்தன் தையலே
(9)
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத்த மிடற்றர், கனல் வாயரா
ஆரத்தர் உறையும் மணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே
(10)
உள்ளமே ஒருஉறுதி உரைப்பன் நான்
வெள்ளம் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர் வயலாரூர் அமர்ந்தஎம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே
(11)
விண்ட மாமலர் மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன் தன்ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே
(12)
மையுலாவிய கண்டத்தன், அண்டத்தன்
கையுலாவிய சூலத்தன், கண்ணுதல்
ஐயன்ஆரூர் அடி தொழுவார்க்கெலாம்
உய்யலாம், அல்லல் ஒன்றிலை காண்மினே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page