திருவாரூர் – அப்பர் தேவாரம் (8):

<– திருவாரூர்

 

(1)
படுகுழிப் பவ்வத்தன்ன பண்டியைப் பெய்தவாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை, காண்தொறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர், மூர்க்கரேல் இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே
(2)
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றுமில்லை
சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே
(3)
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கஞ்சலென்னீர் ஆரூர் மூலட்டனீரே
(4)
கெண்டையந்தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந்தைவர் குலைத்திடர்க் குழியினூக்கக்
கண்டுநான் தரிக்ககில்லேன், காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்ட வானவர் போற்றும் ஆரூர் மூலட்டனீரே
(5)
தாழ்குழலின் சொல்நல்லார் தங்களைத் தஞ்சமென்று
ஏழையேனாகி நாளும் என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும், வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப்படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்ட னீரே
(6)
மாற்றமொன்றருளகில்லீர், மதியிலேன் விதியிலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர், சிக்கன உடையராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவும் கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே
(7)
உயிர்நிலை உடம்பே காலா, உள்ளமே தாழியாகத்
துயரமே ஏற்றமாகத் துன்பக்கோல் அதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழியவிட்டுப் பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க்காற்றேன் ஆரூர் மூலட்டனீரே
(8)
கற்றதேல் ஒன்றுமில்லை, காரிகையாரோடு ஆடிப்
பெற்றதேல் பெரிதும் துன்பம், பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய
அற்றுநான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனாரே
(9)
பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் உள்ளம் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனாரே
(10)
தடக்கை நாலைந்தும் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதமெல்லாம்
முடித்தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி
அடர்த்தருள் செய்ததென்னே ஆரூர் மூலட்டனீரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page