திருவாரூர் – அப்பர் தேவாரம் (9):

<– திருவாரூர்

 

(1)
குழல்வலம் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலம் கொண்டு நீங்காக் கணங்கள், அக்கணங்களார
அழல்வலம் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே
(2)
நாகத்தை நங்கையஞ்ச, நங்கையை மஞ்ஞையென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தினில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்என்றஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே
(3)
தொழுதகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார் அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்தம்அன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கள் புதுமுகிழ் சூடினாரே
(4)
நஞ்சிருள் மணிகொள் கண்டர், நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்தாடி விளங்கினார் போலும், மூவா
வெஞ்சுடர் முகடுதீண்டி வெள்ளி நாராசம்அன்ன
அஞ்சுடர் அணிவெண் திங்கள் அணியும் ஆரூரனாரே
(5)
எந்தளிர் நீர்மை கோல மேனி என்றிமையோர் ஏத்தப்
பைந்தளிர்க் கொம்பர்அன்ன படர்கொடி பயிலப்பட்டுத்
தஞ்சடைத் தொத்தினாலும் தம்மதோர் நீர்மையாலும்
அந்தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே
(6)
வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியம் சூடித்
தானகம் அழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்
ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகத்தஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே
(7)
அஞ்சணை கணையினானை அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சுமாடி ஆடரவு ஆட்டுவார் தாம்
அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்திடம் கொண்டாரே
(8)
வணங்கிமுன் அமரரேத்த வல்வினையான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை அண்ணல்
மணங்கமழ் ஓதி பாகர் மதிநிலா வட்டத்தாடி
அணங்கொடி மாடவீதி ஆரூரெம் அடிகளாரே
(9)
நகலிடம் பிறர்கட்காக நான்மறையோர்கள் தங்கள்
புகலிடமாகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகலிடமாக நீண்டங்கு ஈண்டெழில் அழலதாகி
அகலிடம் பரவியேத்த அடிகள் ஆரூரனாரே
(10)
ஆயிர நதிகள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் அட்டித்தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page