(1)
சூலப் படையானைச், சூழாக வீழருவிக்
கோலத்தோள் குங்குமஞ்சேர் குன்றெட்டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப், பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்டது ஆரூரே
(2)
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கவூர்ப் பிச்சை ஏற்றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோடு
அக்கணிந்த அம்மானை நான்கண்டது ஆரூரே
(3)
சேய உலகமும் செல்சார்வும் ஆனானை
மாயப்போர் வல்லானை, மாலைதாழ் மார்பானை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத்திடையானை நான்கண்டது ஆரூரே
(4)
ஏறேற்ற மாவேறி, எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணம் சீறி, மயானத்தில்
நீறேற்ற மேனியனாய், நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்டது ஆரூரே
(5)
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான ஊர்க்கெல்லாம் செல்லும் பரமனார்
தேங்காவி நாறும் திருவாரூர்த் தொல்நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாதிருந்தாரே
(6)
எம்பட்டம் பட்டம் உடையானை, ஏர்மதியின்
நும்பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டுடுத்துச் சிறுமான் உரியாடை
அம்பட்டசைத்தானை நான்கண்டது ஆரூரே
(7)
போழொத்த வெண்மதியம் சூடிப் பொலிந்திலங்கு
வேழத்துரி போர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ அன்னானை, ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்டது ஆரூரே
(8)
வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத், தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்டது ஆரூரே
(9)
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோடு ஆடிய நீள்மார்பன்
பேரமுதம் உண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்சு
ஆரமுதா உண்டானை நான்கண்டது ஆரூரே
(10)
தாள்தழுவு கையன், தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன், கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக் காலன்னான் ஓர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்டது ஆரூரே
(11)
மஞ்சாடு குன்றடர ஊன்றி மணிவிரலால்
துஞ்சாப்போர் வாளரக்கன் தோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந்து அணிவித்துத், தன்மார்பில் பால்வெண்ணீற்று
அஞ்சாந்தணிந்தானை நான்கண்டது ஆரூரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...