திருவாரூர் – அப்பர் தேவாரம் (12):

<– திருவாரூர்

 

(1)
கைம்மான மதகளிற்றின் உரிவையான் காண்
    கறைக்கண்டன் காண், கண்ணார் நெற்றியான் காண்
அம்மான் காண், ஆடரவொன்றாட்டினான் காண்
    அனலாடி காண், அயில்வாய்ச் சூலத்தான் காண்
எம்மான் காண், ஏழுலகும் ஆயினான் காண்
    எரிசுடரோன் காண், இலங்கு மழுவாளன் காண்
செம்மானத்தொளி அன்ன மேனியான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(2)
ஊனேறு படுதலையில் உண்டியான் காண்
    ஓங்காரன் காண், ஊழி முதலானான் காண்
ஆனேறொன்று ஊர்ந்துழலும் ஐயாறன் காண்
    அண்டன் காண், அண்டத்துக்கப்பாலான் காண்
மானேறு கரதலத்தெம் மணிகண்டன் காண்
    மாதவன் காண், மாதவத்தின் விளைவானான் காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணியான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(3)
ஏவணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண்
    இறையவன் காண், மறையவன் காண், ஈசன் தான் காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையினான் காண்
    சுடர்மூன்றும் கண்மூன்றாக் கொண்டான் தான் காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண்டான் காண்
    அனலாடி காண், அடியார்க்கமிர்தானான் காண்
தீவணத்த திருவுருவில் கரியுருவன் காண்
    திருவாரூரான் காண் என்சிந்தையானே
(4)
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றாலன் காண்
    கொடுமழுவன் காண், கொல்லை வெள்ளேற்றான் காண்
எங்கள்பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண்
    ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண்
பொங்குமா கருங்கடல் நஞ்சுண்டான் தான் காண்
    பொற்றூண் காண், செம்பவளத் திரள்போல்வான் காண்
செங்கண் வாளரா மதியோடுடன் வைத்தான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(5)
காரேறு நெடுங்குடுமிக் கயிலாயன் காண்
    கறைக்கண்டன் காண், கண்ணார் நெற்றியான் காண்
போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தினான் காண்
    புண்ணியன் காண், எண்ணரும் பல்குணத்தினான் காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையினான் காண்
    நின்மலன் காண், நிகரேதும் இல்லாதான் காண்
சீரேறு திருமாலோர் பாகத்தான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(6)
பிறையரவக் குறுங்கண்ணிச் சடையினான் காண்
    பிறப்பிலி காண், பெண்ணோடுஆண் ஆயினான் காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற்றான் காண்
    கழல்தொழுவார் பிறப்பறுக்கும் காபாலி காண்
இறையுருவக் கனவளையாள் இடப்பாகன் காண்
    இருநிலன் காண், இருநிலத்துக்கியல்பானான் காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மையான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(7)
தலையுருவச் சிரமாலை சூடினான் காண்
    தமருலகம் தலைகலனாப் பலிகொள்வான் காண்
அலையுருவச் சுடராழி ஆக்கினான் காண்
    அவ்வாழி நெடுமாலுக்கருளினான் காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கையான் காண்
    கூரெரிநீர் மண்ணொடு காற்றாயினான் காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தினான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(8)
ஐயன் காண், குமரன் காண், ஆதியான் காண்
    அடல் மழுவாள் தானொன்று பியன் மேலேந்து
கையன் காண், கடற்பூதப் படையினான் காண்
    கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந்தான் காண்
வெய்யன் காண், தண்புனல் சூழ் செஞ்சடையான் காண்
    வெண்ணீற்றான் காண், விசயற்கருள் செய்தான் காண்
செய்யன் காண், கரியன் காண், வெளியோன் தான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(9)
மலைவளர்த்த மடமங்கை பாகத்தான் காண்
    மயானத்தான் காண், மதியம் சூடினான் காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலையான் காண்
    இறையவன் காண், எறிதிரைநீர் நஞ்சுண்டான் காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத்தான் காண்
    கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தினான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே
(10)
பொற்றாது மலர்க்கொன்றை சூடினான் காண்
    புரிநூலன் காண், பொடியார் மேனியான் காண்
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான் காண்
    மறையோதி காண், எறிநீர் நஞ்சுண்டான் காண்
எற்றாலும் குறைவொன்றும் இல்லாதான் காண்
    இறையவன் காண், மறையவன் காண், ஈசன் தான் காண்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தான் காண்
    திருவாரூரான் காண் என் சிந்தையானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page