(1)
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொழாதே
உய்யலாம் என்றெண்ணி உறிதூக்கி உழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்
கையினால் தொழாதொழிந்து, கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே
(2)
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டென்னையோர் உருவமாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டென் உள்ளம் கோயிலாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள்செய்த ஆரூரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி, முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே
(3)
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாம் குண்டர்கள்தம் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆரூரர்தம்
அருகிருக்கும் விதியின்றி, அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே
(4)
குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகை நாணாதுழிதர்வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பாறலையில் தெளித்துத்தன் பாதம் காட்டித்
தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல் அருள்செய்யும் ஆரூரரைப்
பண்டெலாம் அறியாதே, பனிநீரால் பாவைசெயப் பாவித்தேனே
(5)
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொல்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகம் திரிதந்தீங்கு இருகைஏற்றிட உண்ட ஏழையேனான்
பொன்னாகத்தடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என்னாகத்திருத்தாதே, ஏதன்போர்க் காதனாய் அகப்பட்டேனே
(6)
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர்வேனை
ஒப்போட ஓதுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்தங்குறுதி காட்டி
அப்போதைக்கப்போதும் அடியவர்கட்காரமுதாம் ஆரூரரை
எப்போதும் நினையாதே, இருட்டறையின் மலடு கறந்து எய்த்தவாறே
(7)
கதியொன்றும் அறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையிலுண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண நகை நாணாதுழிதர்வேற்கு
மதிதந்த ஆரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகிஉய்யும்
விதியின்றி மதியிலியேன், விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே
(8)
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக் கதவடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே பாழூரில் பயிக்கம்புக்கெய்த்தவாறே
(9)
ஒட்டாத வாளவுணர் புரமூன்றும் ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக், காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச்செற்றக் குரோதம்
தட்டானைச் சாராதே, தவமிருக்க அவம் செய்து தருக்கினேனே
(10)
மறுத்தானொர் வல்லரக்கன் ஈரைந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித் தவிசின்மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை,ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே, கரும்பிருக்க இரும்பு கடித்தெய்த்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...