திருவாய்மூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருவாய்மூர்

(1)
தளிரிள வளரென உமைபாடத் தாளம் இடவோர் கழல்வீசிக்
கிளரிள மணிஅரவரை ஆர்த்தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க்கருள் நல்கி, வெண்ணீறணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொடு இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(2)
வெந்தழல் வடிவினர், பொடிப்பூசி, விரிதரு கோவண உடைமேலோர்
பந்தம் செய்து அரவசைத்து, ஒலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக்கருள் நல்கிச் செஞ்சுடர் வண்ணர் தம் அடிபரவ
வந்தனை பலசெய இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(3)
பண்ணிற் பொலிந்த வீணையர், பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார், உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடி நீறணிமார்பர், சுடர்பொன் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடிவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(4)
எரிகிளர் மதியமொடு, எழில்நுதல் மேல் எறிபொறி அரவினொடு ஆறுமூழ்க
விரிகிளர் சடையினர், விடையேறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருஅகலம் பொன்செய்த வாய்மையர், பொன்மிளிரும்
வரியரவு அரைக்கசைத்து இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(5)
அஞ்சன மணிவணம் எழில்நிறமா அகமிடறணி கொள உடல்திமில
நஞ்சினை அமரர்கள் அமுதமென நண்ணிய, நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்த நிறமும் அஃதே
வஞ்சனை வடிவினொடிவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(6)
அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை அடிநிழல் அவைபரவ
எல்லியம் போதுகொண்டு எரியேந்தி எழிலொடு தொழிலவை இசைய வல்லார்
சொல்லிய அருமறை இசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியம் தோலுடுத்திவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(7)
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர், விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர், மறுகின் நல்லார் முறைமுறை பலிபெய முறுவல் செய்வார்
பொடியணி வடிவொடு திருஅகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொடு இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(8)
கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர், வீணையர் தாமும் அஃதே
எட்டுணை சாந்தமொடு உமைதுணையா இறைவனார் உறைவதொர் இடம்வினவில்
பட்டிணை அகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(9)
ஏன மருப்பினொடு எழிலாமை இசையப் பூண்டோர் ஏறேறிக்
கானமது இடமா உறைகின்ற கள்வர், கனவில் துயர் செய்து
தேனுண மலர்கள் உந்தி விம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநல் மதியினொடு இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(10)
சூடல்வெண் பிறையினர், சுடர்முடியர், சுண்ண வெண்ணீற்றினர், சுடர்மழுவர்
பாடல் வண்டிசை முரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்து பெய்ய
வாடல் வெண்தலை பிடித்து இவர் காணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
(11)
திங்களொடு அருவரைப் பொழிற்சோலைத் தேனலம் கானலம் திருவாய்மூர்
அங்கமொடு அருமறையொலி பாடல் அழல்நிற வண்ணர் தம் அடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம்பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி உலகுக்கோர் தவநெறியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page