திருவாய்மூர் – அப்பர் தேவாரம் (1):

<-- திருவாய்மூர்

(1)
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார் அதென் கொலோ
(2)
மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன்ஆமா சொல்லி
என்னை வாவென்று போனார் அதென்கொலோ
(3)
தஞ்சே கண்டேன் தரிக்கிலாதார் என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஒட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே
(4)
கழியக் கண்டிலேன் கண்ணெதிரே கண்டேன்
ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன்
வழியில் கண்டிலேன் வாய்மூர்அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ
(5)
ஒள்ளியார் அவரன்றி மற்றில்லை என்று
உள்கி உள்கி உகந்திருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளியார் அவர் போலக் கரந்ததே
(6)
யாதே செய்தும் யாமலோம் நீஎன்னில்
ஆதே ஏயும் அளவில் பெருமையான்
மாதேவாகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ
(7)
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க்கே எனா
ஓடிப் போந்திங்கு ஒளித்தவாறென் கொலோ
(8)
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே
(9)
தனக்கேறாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக்கே எனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ
(10)
தீண்டற்கரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார் அரக்கன் தனை
வேண்டிக் கொண்டேன் திருவாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page