திருவாய்மூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருவாய்மூர்

(1)
பாட அடியார் பரவக் கண்டேன்
    பத்தர் கணம்கண்டேன், மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
    அங்கை அனல்கண்டேன், கங்கையாளைக்
கோடல் அரவார் சடையில் கண்டேன்
    கொக்கின் இதழ் கண்டேன், கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையில் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(2)
பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன்
    பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்
    நெற்றி நுதல்கண்டேன், பெற்றம் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியம் கண்டேன்
    கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியும் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(3)
மண்ணைத் திகழ நடமதாடும்
    வரை சிலம்பார்க்கின்ற பாதம் கண்டேன்
விண்ணில் திகழும் முடியும் கண்டேன்
    வேடம் பலவாம் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்
    நாலுமறைஅங்கம் ஓதக் கண்டேன்
வண்ணம் பொலிந்திலங்கு கோலம் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(4)
விளைத்த பெரும்பத்தி கூர நின்று
    மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்கும் கதநாக மேனி கண்டேன்
    என்பின் கலன் திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்
    சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(5)
கான்மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்
    காலில் கழல்கண்டேன், கரியின் தோல்கொண்டு
ஊன்மறையப் போர்த்த வடிவும் கண்டேன்
    உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்
நான்மறையானோடு நெடிய மாலும்
    நண்ணி வரக்கண்டேன், திண்ணமாக
மான்மறி தங்கையில் மருவக் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(6)
அடியார் சிலம்பொலிகள் ஆர்ப்பக் கண்டேன்
    அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
    மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியார் அதன்மேல் இடபம் கண்டேன்
    கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையில் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(7)
குழையார் திருத்தோடு காதில் கண்டேன்
    கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
    ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன், தன்மை கண்டேன்
    தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றும் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(8)
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
    போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன்
    பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
    மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்குமாறு கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(9)
மெய்யன்பர் ஆனார்க்கருளும் கண்டேன்
    வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்
கையம்பு அரண்எரித்த காட்சி கண்டேன்
    கங்கணமும் அங்கைக் கனலும் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
    அன்றவன்தன் வேள்வி அழித்துகந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
(10)
கலங்க இருவர்க்கழலாய் நீண்ட
    காரணமும் கண்டேன், கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்பும் கண்டேன்
    பாடல் ஒலியெலாம் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
    இறுத்தவனுக்கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page