(1)
கரையுலாம் கடலில் பொலி சங்கம் வெள்இப்பி, வன்
திரையுலாம் கழிமீன் உகளும் திருவான்மியூர்
உரையுலாம் பொருளாய் உலகாளுடையீர் சொலீர்
வரையுலா மட மாதுடனாகிய மாண்பதே
(2)
சந்துயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்தடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல்மேல் சிலம்பார்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறமாக்கிய வண்ணமே
(3)
கானயங்கிய தண்கழி சூழ்கடலின் புறம்
தேனயங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர்த்
தோல் நயங்கமர் ஆடையினீர் அடிகேள் சொலீர்
ஆனைஅங்கவ்வுரி போர்த்தனலாட உகந்ததே
(4)
மஞ்சுலாவிய மாடமதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள் தாம் பயிலும் திருவான்மியூர்த்
துஞ்சு வஞ்சிருள்ஆடல் உகக்கவல்லீர் சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க்கின்னருள் வைத்ததே
(5)
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெனப் புரிசைத் தொழிலார் திருவான்மியூர்த்
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர் சொலீர்
விண்ணினில்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே
(6)
போதுலாவிய தண்பொழில் சூழ் புரிசைப்புறம்
தீதில் அந்தணர் ஓத்தொழியாத் திருவான்மியூர்ச்
சூதுலாவிய கொங்கையொர் பங்குடையீர் சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பதே
(7)
வண்டிரைத்த தடம்பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடலோத மல்கும் திருவான்மியூர்த்
தொண்டிரைத்தெழுந்தேத்திய தொல்கழலீர் சொலீர்
பண்டிருக்கொரு நால்வர்க்கு நீர்உரை செய்ததே
(8)
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்திறத்
திக்கில் வந்தலற அடர்த்தீர், திருவான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர், அருளென் சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே
(9)
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வ மல்கும் திருவான்மியூர்ச்
சுருதியார், இருவர்க்கும் அறிவரியீர் சொலீர்
எருது மேல்கொடு உழன்றுகந்தில் பலி ஏற்றதே
(10)
மை தழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்தவத் தொழிலார் இசைசேர் திருவான்மியூர்
மெய்தவப் பொடி பூசிய மேனியினீர் சொலீர்
கைதவச் சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே
(11)
மாதொர் கூறுடை நற்றவனைத், திருவான்மியூர்
ஆதி எம்பெருமான் அருள் செய்ய, வினாவுரை
ஓதிஅன்றெழு காழியுண் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடு வானுலகு ஆள்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...