(1)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே
(2)
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்து
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே
(3)
மந்தமாகிய சிந்தை மயக்கறுத்து
அந்தமில் குணத்தானை அடைந்துநின்று
எந்தை ஈசன் என்றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே
(4)
உள்ளம்உள் கலந்தேத்த வல்லார்க்கலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான்அலன்
வெள்ளமும் அரவும் விரவும் சடை
வள்ளலாகிய வான்மியூர் ஈசனே
(5)
படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழுவார் வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே
(6)
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடியாள் உமைபங்க என்று
அஞ்சி நாண்மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
(7)
நுணங்கு நூலயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தான்பரவிக் குறைந்துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழியார் அவர்
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே
(8)
ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுருவாய பரமனென்று
ஓதி உள் குழைந்தேத்த வல்லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
(9)
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
(10)
பாரமாக மலையெடுத்தான் தனைச்
சீரமாகத் திருவிரல் ஊன்றினான்
ஆர்வமாக அழைத்தவன் ஏத்தலும்
வாரமாயினன் வான்மியூர் ஈசனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...