திருவலிதாயம்:

<– தொண்டை நாடு

 

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
பத்தரோடு பலரும் பொலிய மலர்அங்கைப் புனல்தூவி
ஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த, உயர்சென்னி
மத்தம்வைத்த பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயம்
சித்தம் வைத்த அடியாரவர்மேல் அடையா மற்றிடர் நோயே
(2)
படையிலங்கு கரம் எட்டுடையான், படிறாகக் கலனேந்திக்
கடையிலங்கு மனையில் பலிகொண்டுணும் கள்வன் உறைகோயில்
மடையிலங்கு பொழிலின் நிழல்வாய் மதுவீசும் வலிதாயம்
அடைய நின்ற அடியார்க்கடையா வினை அல்லல் துயர்தானே
(3)
ஐயன் நொய்யன் அணியன், பிணியில் அவரென்று தொழுதேத்தச்
செய்யன், வெய்ய படை ஏந்தவல்லான், திருமாதோடு உறைகோயில்
வையம்வந்து பணியப் பிணி தீர்த்துயர்கின்ற வலிதாயம்
உய்யும்வண்ணம் நினைமின், நினைந்தால் வினைதீரும் நலமாமே
(4)
ஒற்றை ஏறதுடையான், நடமாடியோர் பூதப்படை சூழப்
புற்றின் நாகம் அரையார்த்துழல்கின்ற எம் பெம்மான், மடவாளோடு
உற்றகோயில் உலகத்தொளி மல்கிட உள்கும் வலிதாயம்
பற்றிவாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே
(5)
புந்தியொன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியான் அமர் கோயில், அயலெங்கும்
மந்திவந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயம்
சிந்தியாத அவர்தம் அடும்வெந்துயர் தீர்தல் எளிதன்றே
(6)
ஊனியன்ற தலையில் பலிகொண்டு உலகத்துள்ளவர் ஏத்தக்
கானியன்ற கரியின்உரி போர்த்துழல் கள்வன், சடை தன்மேல்
வானியன்ற பிறை வைத்த எம்ஆதி மகிழும் வலிதாயம்
தேனியன்ற நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவாமே
(7)
கண்ணிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர்வீட்டிப்
பெண்ணிறைந்த ஒருபால் மகிழ்வெய்திய பெம்மான் உறைகோயில்
மண்ணிறைந்த புகழ் கொண்டடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உண்ணிறைந்த பெருமான் கழலேத்த நம் உண்மைக் கதியாமே
(8)
கடலின் நஞ்சம் அமுதுண்டிமையோர் தொழுதேத்த நடமாடி
அடல்இலங்கை அரையன் வலிசெற்றருள் அம்மான் அமர்கோயில்
மடலிலங்கு கமுகின் பலவின் மதுவிம்மும் வலிதாயம்
உடலிலங்கும் உயிர்உள்ளளவும் தொழ உள்ளத்துயர் போமே
(9)
பெரிய மேரு வரையே சிலையா, மலைவுற்றார் எயில்மூன்றும்
எரிய எய்தஒருவன், இருவர்க்கறிவொண்ணா வடிவாகும்
எரியதாகி உறவோங்கியவன், வலிதாயம் தொழுதேத்த
உரியராக உடையார் பெரியார் எனஉள்கும் உலகோரே
(10)
ஆசியார மொழியார், அமண் சாக்கியர், அல்லாதவர் கூடி
ஏசி ஈரமிலராய் மொழி செய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்
வாசிதீர அடியார்க்கருள் செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வமுடையார் அடியாரெனப் பேணும் பெரியோரே
(11)
வண்டு வைகும் மணமல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலைத் தமிழாகக்
கண்டல்வைகு கடற்காழியுள் ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
கொண்டுவைகி இசைபாட வல்லார் குளிர் வானத்துயர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page