திருவலம்புரம் – சுந்தரர் தேவாரம்:

<– திருவலம்புரம்

(1)
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினியவன், தமர்க்கினியவன்; எழுமையும்
மனக்கினியவன் தனதுஇடம் வலம்புரமே
(2)
புரமவை எரிதர வளைந்த வில்லினன், நவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்து, அயல்இரந்துண விரும்பிநின்று
இரவெரியாடி தன் இடம் வலம்புரமே
(3)
நீறணி மேனியன், நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடு மழுவேந்தி ஒர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம் வலம்புரமே
(4)
கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளம்
தெங்கொடு பனைபழம் படும்இடம், தேவர்கள்
தங்கிடும் இடம், தடங்கடல்திரை புடைதர
எங்களதடிகள் நல்லிடம் வலம்புரமே
(5)
கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதிள் சிறுமையின் நிரவ வல்லவன் இடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்து
இடுமணல் அடைகரை இடம் வலம்புரமே
(6)
கருங்கடக் களிற்றுரிக் கடவுளது இடம், கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலம்சலம் மணம்புணர்ந்து
இருங்கடல் அடைகரை இடம் வலம்புரமே
(7)
நரிபுரி காடரங்கா நடமாடுவர்
வரிபுரி பாடநின்றாடும் எம்மான்இடம்
புரிசுரி வரிகுழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரிஎரியாடி தன்இடம் வலம்புரமே
(8)
பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன், நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம் வலம்புரமே
(9)
சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவடகத்தொடு பலி கலந்துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம் வலம்புரமே
(10)
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்திசைக்கொரு சுடர் இடம் வலம்புரமே
(11)
வருங்கலமும் பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம் வலம்புரத்தினை
அருங்குலத்தருந்தமிழ் ஊரன் வன்தொண்டன் சொல்
பெருங்குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page