திருவலம்புரம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருவலம்புரம்

(1)
கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனிவெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர் பிரான், அடியார் இசைந்தேத்தத்
துடியிடையாளை ஓர் பாகமாகத் துதைந்தார் இடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே
(2)
கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன்று அநங்கனைத் தேசழித்துத், திசையார் தொழுதேத்தக்
காய்த்த கல்லால் அதன்கீழிருந்த கடவுள் இடம்போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே
(3)
நொய்யதொர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனி வெண்ணீறுபூசி, விரிபுன் சடைதாழ
மையிரும் சோலை மணங்கமழ இருந்தார் இடம்போலும்
வைகலும் மாமுழவம் அதிரும் வலம்புர நன்னகரே
(4)
ஊனமர் ஆக்கை உடம்பு தன்னை உணரில் பொருளன்று
தேனமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ
ஆனமர்ஐந்தும் கொண்டாட்டுகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே
(5)
செற்றெறியும் திரையார் கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்டம், அணியார் தடங்கண்ணி
பெற்றறிவார், எருதேற வல்ல பெருமான் இடம்போலும்
வற்றறியாப் புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே
(6)
உண்ண வண்ணத்தொளி நஞ்சமுண்டு உமையோடுடனாகிச்
சுண்ண வண்ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ண வண்ணத்தன பாணிசெய்யப் பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே
(7)
புரிதரு புன்சடை பொன்தயங்கப், புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி, வேய்புரைதோள்
அரைதரு பூந்துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே
(8)
தண்டணை தோளிரு பத்தினொடும் தலைபத்துடையானை
ஒண்றணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க்கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே
(9)
தாருறு தாமரை மேலயனும், தரணி அளந்தானும்
தேர்வறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே
(10)
காவிய நல்துவர் ஆடையினார், கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்
வாவியில் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே
(11)
நல்லியல் நான்மறையோர் புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியம் தோலுடை ஆடையினான் வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன் சேவடி சென்றணுகிச் சிவலோகம் சேர்வாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page