திருவலம்புரம் – அப்பர் தேவாரம் (1):

<– திருவலம்புரம்

(1)
தெண்திரை தேங்கிஓதம் சென்றடி வீழும் காலைத்
தொண்டிரைத்து அண்டர்கோனைத் தொழுதடி வணங்கியெங்கும்
வண்டுகள் மதுக்கண் மாந்தும் வலம்புரத்தடிகள் தம்மைக்
கொண்டு நற்கீதம் பாடக் குழகர் தாம் இருந்தவாறே
(2)
மடுக்களில் வாளை பாய, வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களிறென்னத் தம்மில் பிணை பயின்றணை வரால்கள்
தொடுத்த நன்மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவியேத்த
வடித்தடம் கண்ணி பாகர் வலம்புரத்திருந்தவாறே
(3)
தேனுடை மலர்கள் கொண்டு, திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சும் கொண்டே அன்பினால் அமர ஆட்டி
வானிடை மதியம் சூடும் வலம்புரத்தடிகள் தம்மை
நான்அடைந்தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற்றேனே
(4)
முளைஎயிற்றிள நல்ஏனம் பூண்டு, மொய் சடைகள் தாழ
வளை எயிற்றிளைய நாகம் வலித்தரை இசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியம் சூடி
வளைபயில் இளையர் ஏத்தும் வலம்புரத்தடிகள் தாமே
(5)
சுருளுறு வரையின் மேலால் துலங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நுழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையில் மலர்களேந்த
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே
(6)
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையினானே
அனைத்துடன் கொண்டு வந்தங்கன்பினால் அமைய ஆட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வதென்னே இனி வலம்புரவனீரே
(7)
செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம்பழம் இனிய நாடித்
தங்கயம் துறந்து போந்து, தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையும் காலைக் கொழுங்கனி அழுங்கினாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்தடிகளாரே
(8)
அருகெலாம் குவளை செந்நெல் அகலிலை ஆம்பல் நெய்தல்
தெருவெலாம் தெங்கு மாவும் பழம்விழும் படப்பையெல்லாம்
குருகினம் கூடியாங்கே கும்மலித்திறகுலர்த்தி
மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே
(9)
கருவரை அனைய மேனிக் கடல்வண்ணன் அவனும் காணான்
திருவரைஅனைய பூமேல் திசைமுகன் அவனும் காணான்
ஒருவரை உச்சியேறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமையானார் அவர் வலம்புரவனாரே
(10)
வாளெயிறிலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழன்று
தோளொடு பத்து வாயும் தொலைந்துடன் அழுந்த ஊன்றி
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page