திருவலம்புரம் – அப்பர் தேவாரம் (2):

<– திருவலம்புரம்

(1)
மண்ணளந்த மணிவண்ணர் தாமும், மற்றை
    மறையவனும் வானவரும் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி உடையார், ஒற்றை
    கதநாகம் கையுடையார் காணீரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானுமெல்லாம்
    பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(2)
சிலை நவின்றதொரு கணையால் புரமூன்றெய்த
    தீவண்ணர், சிறந்திமையோர் இறைஞ்சியேத்தக்
கொலைநவின்ற களியானை உரிவை போர்த்துக்
    கூத்தாடித் திரிதருமக் கூத்தர், நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
    கடுவிடைமேல் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளும் கங்கையும் தாமுமெல்லாம்
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(3)
தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை
    ஒருபாலும் அரியுருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
    வருவினையேன் செல்வதுமே அப்பாலெங்கும்
நோக்கார் ஒருவிடத்து நூலும் தோலும்
    துதைந்திலங்கும் திருமேனி வெண்ணீறாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(4)
மூவாத மூக்கப் பாம்பரையில் சாத்தி
    மூவர் உருவாய முதல்வர் இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த
    குழகனார் குளிர்கொன்றை சூடியிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
    புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ
வாவா எனஉரைத்து மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(5)
அனலொருகை அதுஏந்தி அதளினோடே
    ஐந்தலைய மாநாகம் அரையில் சாத்திப்
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப்
    புனிதனார், புரிந்தமரர் இறைஞ்சியேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவாரூரும்
    சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(6)
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
    காலினால் காய்ந்துகந்த காபாலியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டம் சாத்தி
    முனிகணங்கள் புடைசூழ முற்றந்தோறும்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
    சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(7)
பட்டுடுத்துப் பவளம்போல் மேனியெல்லாம்
    பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு
    எவ்வூரீர் எம்பெருமான் என்றேன், ஆவி
விட்டிடுமாறது செய்து விரைந்து நோக்கி
    வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(8)
பல்லார் பயில்பழனம் பாசூரென்று
    பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி இன்று வைகி
    நாளைப்போய் நள்ளாறு சேர்தும் என்றார்
சொல்லார் ஒருஇடமாத் தோள்கை வீசிச்
    சுந்தரராய் வெந்த நீறாடி எங்கும்
மல்லார் வயல்புடை சூழ் மாடவீதி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(9)
பொங்காடரவொன்று கையில் கொண்டு
    போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கார் ஒருவிடத்தும் தம்மேலார்வம்
    தவிர்த்தருளார், தத்துவத்தே நின்றேன் என்பர்
எங்கே இவர்செய்கை ஒன்றொன்றொவ்வா
    என்கண்ணின் நின்றகலா வேடம் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(10)
செங்கண்மால் சிலைபிடித்துச் சேனையோடும்
    சேதுபந்தனம் செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
    போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே ஊன்றி
    அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
    வலம்புரமே புக்கங்கே மன்னினாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page