(1)
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே, இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை, மணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
(2)
விண்டொழிந்தன நம்முடை வல்வினை, விரிகடல் வருநஞ்சம்
உண்டிறைஞ்சு வானவர்தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி இடமாகக்
கொண்ட நாதன் மெய்த்தொழில்புரி தொண்டரோடு இனிதிருந்தமையாலே
(3)
திருந்தலார்புரம் தீயெழச் செறுவன, விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன, பத்தியில் வருவன, மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்துமாவன, மந்திரமாவன, வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித்தலம் தானே
(4)
கறைகொள் கண்டத்தர், காய்கதிர் நிறத்தினர், அறத்திற முனிவர்க்கன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்துகந்து இனிதருள் பெருமானார்
மறைகளோதுவர், வருபுனல் வலஞ்சுழி இடமகிழ்ந்து அருங்கானத்து
அறைகழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
(5)
மண்ணர் நீரர் விண் காற்றினர், ஆற்றலாம் எரியுரு, ஒருபாகம்
பெண்ணர், ஆணெனத் தெரிவரும் வடிவினர், பெருங்கடல் பவளம்போல்
வண்ணராகிலும் வலஞ்சுழி பிரிகிலார், பரிபவர் மனம்புக்க
எண்ணராகிலும், எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே
(6)
ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர், மடமாதர்
இருவர் ஆதரிப்பார், பல பூதமும் பேய்களும் அடையாளம்
அருவராததோர் வெண்தலை கைப்பிடித்தகந்தொறும் பலிக்கென்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே, வரிவளை கவர்ந்தாரே
(7)
குன்றியூர்; குடமூக்கிடம்; வலம்புரம்; குலவிய நெய்த்தானம்
என்று இவ்வூர்களிலோம் என்றும் இயம்புவர், இமையவர் பணிகேட்பார்
அன்றி ஊர் தமக்குள்ளன அறிகிலோம், வலஞ்சுழி அரனார்பால்
சென்ற ஊர்தனில் தலைப்படலாம் என்று சேயிழை தளர்வாமே
(8)
குயிலினேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்தெடுத்தவன் கதிர்முடி தோளிருபதும் ஊன்றி
மயிலினேரன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர், அல்லவர் காணாரே
(9)
அழலதோம்பிய அலர்மிசை அண்ணலும், அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரிதாயவர், மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர், மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே
(10)
அறிவிலாதவன் சமணர்கள் சாக்கியர், தவம்புரிந்து அவம்செய்வார்
நெறியலாதன கூறுவர் மற்றவை தேறல்மின், மாறாநீர்
மறியுலாம் திரைக்காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவிலாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப்வொண்ணாதே
(11)
மாதொர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்திசை கற்றுவல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை
வாதியா வினை, மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...