திருவலஞ்சுழி – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவலஞ்சுழி

(1)
விண்டெலா மலர விரைநாறு தண்தேன் விம்மி
வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழித்
தொண்டெலாம் பரவும் சுடர்போல் ஒளியீர் சொலீர்
பண்டெலாம் பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே
(2)
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறுவல் நகு மொய்யொளியீர் சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டுலகு ஒக்க உழன்றதே
(3)
கிண்ண வண்ண மலரும்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டு மெய்பூச வல்லீர் சொலீர்
விண்ணவர்தொழ வெண்தலையில் பலி கொண்டதே
(4)
கோடெலா நிறையக் குவளைம் மலரும்குழி
மாடெலாம் மலிநீர் மணநாறும் வலஞ்சுழிச்
சேடெலாம் உடையீர், சிறு மான்மறியீர் சொலீர்
நாடெலாம் அறியத் தலையில் நறவேற்றதே
(5)
கொல்லை வென்ற புனத்தில் குருமாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டுழல் செல்வமே
(6)
பூசநீர் பொழியும் புனல் பொன்னியில் பன்மலர்
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர், திரு நீர், சிறுமான் மறியீர் சொலீர்
ஏச வெண்தலையில் பலி கொள்வது இலாமையே
(7)
கந்த மாமலர்ச் சந்தொடு காரகிலும் தழீஇ
வந்தநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர், முதல் நீர், நடுவாம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே
(8)
தேனுற்ற நறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற்ற நசையால் இசைபாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற்றின் உ ரி போர்க்கவல்லீர் சொலீர்
ஊனுற்ற தலை கொண்டுலகு ஒக்க உழன்றதே
(9)
தீர்த்தநீர் வந்திழி புனல் பொன்னியில் பன்மலர்
வார்த்தநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்றடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே
(10)
உரமனும் சடையீர், விடையீர், உமதின்னருள்
வரமனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர் சொலீர்
சிரமெனும் கலனில் பலி வேண்டிய செல்வமே
(11)
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page