திருவலஞ்சுழி – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவலஞ்சுழி

(1)
பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக்கங்கை
வெள்ளமதார விரும்பி நின்ற விகிர்தன், விடையேறும்
வள்ளல், வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ளம்உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே
(2)
காரணி வெள்ளை மதியம்சூடிக் கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே
(3)
பொன்னியலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின்னியலும் சடைதாழ, வேழவுரி போர்த்தரவாட
மன்னிய மாமறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்குயர்வாம் பிணிபோமே
(4)
விடையொரு பால், ஒரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பால், ஒரு பால் இடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பால், ஒரு பால் சிலம்பு, நாளும் வலஞ்சுழி சேர்
அடையொரு பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே
(5)
கையமரும் மழுநாகம் வீணை கலைமான் மறியேந்தி
மெய்யமரும் பொடிப்பூசி வீசும் குழையார் தருதோடும்
பையமரும் அரவாட ஆடும் படர் சடையார்க்கிடமாம்
மையமரும் பொழில்சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே
(6)
தண்டொடு சூலம் தழையஏந்தித் தையலொரு பாகம்
கண்டிடு பெய்பலி பேணி நாணார், கரியின் உரி தோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே
(7)
கல்லியலும் மலை அங்கை நீங்க வளைத்து, வளையாதார்
சொல்லியலும் மதில்மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல்லியலும் திரள்தோள் எம்ஆதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி இருப்பவர் புண்ணியரே
(8)
வெஞ்சின வாளரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சுமொர் ஆறிரு நான்குமொன்றும் அடர்த்தார், அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்று நணுகும் இடம் போலும்
மஞ்சுலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மாநகரே
(9)
ஏடிய நான்முகன், சீர்நெடுமால் என நின்றவர் காணார்
கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர், உலகேத்த
வாடிய வெண்தலை கையிலேந்தி, வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே
(10)
குண்டரும் புத்தரும் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்
தொண்டரும் தன்தொழில் பேணநின்ற கழலான் அழலாடி
வண்டமரும் பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன் எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே
(11)
வாழி எம்மான் எனக்கு எந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை
ஆழிஇவ் வையகத்தேத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழியொரு பெரும் இன்பமோக்கும், உருவும் உயர்வாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page