திருவலஞ்சுழி – அப்பர் தேவாரம் (1):

<– திருவலஞ்சுழி

(1)
ஓதமார் கடலின் விடமுண்டவன்
பூத நாயகன், பொற் கயிலைக்கிறை
மாதொர் பாகன், வலஞ்சுழி ஈசனைப்
பாதமேத்தப் பறையும்நம் பாவமே
(2)
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கிலார் சிலர் பாவித் தொழும்பரே
(3)
இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளையிலாச் செவித் தொண்டர்காள், நும்முடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்
களைகணாகக் கருதிநீர் உய்ம்மினே
(4)
நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவிலாக் கொடும் கூற்றுதைத்திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்றுகொல் காண்பதே
(5)
விண்டவர் புர மூன்றும் எரிகொளத்
திண்திறல் சிலையால்எரி செய்தவன்
வண்டு பண்முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு அடிமைத் திறத்தாவனே
(6)
படங்கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க வாழவல்லான், உம்பர் தம்பிரான்
மடந்தை பாகன், வலஞ்சுழியான் அடி
அடைந்தவர்க்கு அடிமைத் திறத்தாவனே
(7)
நாக்கொண்டு பரவும் அடியார் வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்தன்
ஏக்கொளப் புரமூன்று எரியானவே
(8)
தேடுவார் பிரமன் திருமாலவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாடவீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றதென் சிந்தையே
(9)
கண் பனிக்கும், கைகூப்பும், கண் மூன்றுடை
நண்பனுக்கெனை நான் கொடுப்பேன் எனும்
வண்பொன்னித் தென்வலஞ்சுழி மேவிய
பண்பன் இப்பொனைச் செய்த பரிசிதே
(10)
இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத்தொரு விரல் ஊன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள்வார் அடியென்தலை மேலவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page