(1)
தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை, விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக், கரிகாட்டில் ஆடல்
உடையானை, விடையானைக், கறைகொண்ட கண்டத்து
அம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
(2)
முன்னேஎம் பெருமானை மறந்தென்கொல், மறவாது
ஒழிந்தென்கொல், மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னே, நன்மணியே, வெண்முத்தே, செம்பவளக்
குன்றமே ஈசனென்று உன்னையே புகழ்வேன்
அன்னேஎன் அத்தா என்று அமரரால் அமரப்
படுவானை, அதிகைமா நகருள் வாழ்பவனை
என்னேஎன் எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
(3)
விரும்பினேற்கெனதுள்ளம் விடகிலா விதியே
விண்ணவர்தம் பெருமானே, மண்ணவர் நின்றேத்தும்
கரும்பேஎன் கட்டியென்று உள்ளத்தால் உள்கிக்
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலும் சடைக்கணிந்து, வளராத பிறையும்
வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல் வந்து எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
(4)
நாற்றானத்து ஒருவனை, நானாய பரனை
நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியைக்
காற்றானைத், தீயானைக், கடலானை, மலையின்
தலையானைக், கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப், பிறையானை, அம்மானை, எம்மான்
தம்மானை, யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை, எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
(5)
சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை, அதிகைமா நகருள் வாழ்பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையில் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடம்கொள்வான், மலைஆரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
(6)
மைம்மான மணிநீல கண்டத்து எம்பெருமான்
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை, வானோர்
தம்மானைத், தலைமகனைத், தண்மதியும் பாம்பும்
தடுமாறும் சடையானைத், தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை, வேத
விதியானை, வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே
(7)
வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபேறாக்கம்
பெய்தானைப், பிஞ்ஞகனை, மைஞ்ஞவிலும் கண்டத்து
எண்தோள் எம்பெருமானைப், பெண்பாகம் ஒருபால்
செய்தானைச், செக்கர்வான் ஒளியானைத்; தீவாய்
அரவாடு சடையானைத், திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே
(8)
பொன்னானை, மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக், குடபாலின் வடபாலின் குணபால்
சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள்தம் பெருமானைக், கருமான்
உரியானை, அதிகைமா நகருள் வாழ்பவனை
என்னானை எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே
(9)
திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
சிலை வளைவித்து ஒருகணையால் தொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதக்களிற்றின் உரியானைப், பெரிய
கண்மூன்றும் உடையானைக், கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப், பேயுருவ மூன்றும்உற மலைமேல்
இருந்தானை, எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே
(10)
என்பினையே கலனாக அணிந்தானை, எங்கள்
எருதேறும் பெருமானை, இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவலூர்க் கோன்
வன்தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவரிய வத்தர்
பெருமானை, அதிகைமா நகருள் வாழ்பவனை
என்பொன்னை, எறிகெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன்போல் யானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...