திருவதிகை – சம்பந்தர் தேவாரம்:

<– திருவதிகை

(1)
குண்டைக் குறள்பூதம் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ் தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே
(2)
அரும்பும் குரும்பையும் மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடுடன் கைஅனல் வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பும் அதிகையுளாடும் வீரட்டானத்தே
(3)
ஆடலழனாக அரைக்கிட்டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லான் ஆடும் வீரட்டானத்தே
(4)
எண்ணார் எயிலெய்தான், இறைவன், அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே
(5)
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின்ற ஒருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந்திய பெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல் சூடியாடும் வீரட்டானத்தே
(6)
துளங்கும் சுடர்அங்கைத் துதைய விளையாடி
இளங் கொம்பன சாயல் உமையோடு இசைபாடி
வளம்கொள் புனல்சூழ்ந்த வயலார் அதிகையுள்
விளங்கும் பிறை சூடியாடும் வீரட்டானத்தே
(7)
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உ டையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே
(8)
கல்லார் வரைஅரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை அடர்த்தவனுக்கருள் செய்து அதிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண்தலை சூடி
வில்லால் எயிலெய்தான் ஆடும் வீரட்டானத்தே
(9)
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூல் உடையானைக்
கடியார் கழுநீலம் மலரும் அதிகையுள்
வெடியார் தலையேந்தியாடும் வீரட்டானத்தே
(10)
அரையோடு அலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோடு உடனேந்தி உடைவிட்டுழல்வார்கள்
உரையோடுரை ஓவ்வாது உமையோடு உடனாகி
விரைதோய் அலர்தாரான் ஆடும் வீரட்டானத்தே
(11)
ஞாழல் கமழ் காழியுண் ஞானசம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழும் துணையாக நினைவார் வினையிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page