திருவதிகை – அப்பர் தேவாரம் (8):

<– திருவதிகை

(1)
மடக்கினார் புலியின் தோலை, மாமணி நாகம் கச்சா
முடக்கினார், முகிழ்வெண் திங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார், தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை அல்குல்
அடக்கினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
(2)
சூடினார் கங்கையாளைச், சூடிய துழனி கேட்டங்கு
ஊடினாள் நங்கையாளும், ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம், பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
(3)
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணலாகா வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
(4)
மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகம்
செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப்
பொறிபடக் கிடந்த நாகம் புகைஉமிழ்ந்தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலும் கெடில வீரட்டனாரே
(5)
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளும் தெண்ணீர்க் கழனிசூழ் பழனவேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகை வீரட்டனாரே
(6)
புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய்ப் பலாசங்கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீறணிந்தவர் மணி வெள்ளேற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின்றேனை
அள்ளலைக் கடப்பித்தாளும் அதிகை வீரட்டனாரே
(7)
நீறிட்ட நுதலர், வேலை நீலஞ்சேர் கண்டர், மாதர்
கூறிட்ட மெய்யராகிக், கூறினார் ஆறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையின் உள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகை வீரட்டனாரே
(8)
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தலாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்கலாகார்
நாணிலார் ஐவரோடும் இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே
(9)
தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்தும் சிதறுவித்தவனை அன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page