(1)
முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாதோடிக்
கண்கண இருமி நாளும் கருத்தழிந்தருத்தமின்றிப்
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகை வீரட்டனீரே
(2)
கறைப்பெரும் கண்டத்தானே, காய்கதிர் நமனை அஞ்சி
நிறைப்பெரும் கடலும் கண்டேன், நீள்வரை உச்சி கண்டேன்
பிறைப்பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும்
அறுப்பதோர் உபாயம் காணேன் அதிகை வீரட்டனீரே
(3)
நாதனார் என்ன நாளும் நடுங்கினராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்
ஆதன்நான் அவனென்றெள்கி அதிகை வீரட்டனே நின்
பாதநான் பரவாதுய்க்கும் பழவினைப் பரிசிலேனே
(4)
சுடலைசேர் சுண்ண மெய்யர், சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர், பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்ட மேய கிளர்சடை முடியனாரே
(5)
மந்திரம் உள்ளதாக, மறிகடல் எழு நெய்யாக
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரமாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திர முரலும் சோலைக் கானலம் கெடிலத்தாரே
(6)
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி
மெய்ஞ் ஞரம்புதிரம் பில்க விசை தணிந்தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம்பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரம் கேட்டுகந்தார் கெடில வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...