(1)
கோணல் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(2)
பண்ணினைப் பவளத் திரள் மாமணி
அண்ணலை, அமரர்தொழும் ஆதியைச்
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
நண்ணில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(3)
உற்றவர் தம் உறுநோய் களைபவர்
பெற்றமேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம்
கற்கில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(4)
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ
வில்தான் கொண்டெயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(5)
பல்லாரும் பலதேவர் பணிபவர்
நல்லாரும் நயந்தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்
கல்லேன் ஆகிலென் கண்துயில் கொள்ளுமே
(6)
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோடரவமும்
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(7)
அரையார் கோவண ஆடையன், ஆறெலாம்
திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை
விரையார் நீற்றன், விளங்கு வீரட்டன் பால்
கரையேன் ஆகிலென் கண்துயில் கொள்ளுமே
(8)
நீறுடைத் தடந்தோளுடை நின்மலன்
ஆறுடைப் புனல்பாய் கெடிலக்கரை
ஏறுடைக் கொடியான் திருவீரட்டம்
கூறில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே
(9)
செங்கண்மால் விடையேறிய செல்வனார்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலமதாகிய வீரட்டம்
கங்குலாக என் கண்துயில் கொள்ளுமே
(10)
பூணாண் ஆரம் பொருந்த உடையவர்
நாணாக வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேன் ஆகிலென் கண்துயில் கொள்ளுமே
(11)
வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
திரையார்ந்த புனல் பாய் கெடிலக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகிலென் கண்துயில் கொள்ளுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...