திருவதிகை – அப்பர் தேவாரம் (12):

<– திருவதிகை

(1)
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்டலர் இடுவார் வினை மாயுமால்
கட்டித் தேன் கலந்தன்ன கெடில!வீ
ரட்டனார் அடி சேரும் அவருக்கே
(2)
நீளமா நினைந்து எண் மலரிட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்
வாள மால் இழியும் கெடிலக்கரை
வேளி சூழ்ந்த அழகாய வீரட்டரே
(3)
கள்ளின் நாண்மலர் ஓரிருநான்கு கொண்டு
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய் கெடிலக்கரை
வெள்ளை நீறணி மேனி வீரட்டரே
(4)
பூங்கொத்தாயின மூன்றொடோர் ஐந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு தண்புனல் பாய் கெடிலக்கரை
வேங்கைத் தோலுடை ஆடை வீரட்டரே
(5)
தேனப் போதுகள் மூன்றொடோர் ஐந்துடன்
தானப் போதிடுவார் வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய் கெடிலக்கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே
(6)
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய் கெடிலக்கரை
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே
(7)
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழியும் கெடிலக்கரை
விரைகள் சூழ்ந்த அழகாய வீரட்டரே
(8)
ஓலி வண்டறை ஒண்மலர் எட்டினால்
காலையேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழியும் கெடிலக்கரை
வேலி சூழ்ந்த அழகாய வீரட்டரே
(9)
தாரித் துள்ளித் தடமலர் எட்டினால்
பாரித்தேத்த வல்லார் வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய் கெடிலக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்த வீரட்டரே
(10)
அட்ட புட்பம் அவை கொளுமாறு கொண்டு
அட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து
அட்டுமாறு செய்கிற்ப அதிகை!வீ
ரட்டனார் அடி சேரும் அவர்களே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page