திருவதிகை – அப்பர் தேவாரம் (14):

<– திருவதிகை

(1)
சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
    சடா மகுடத்திருத்துமே, சாம வேத
கந்தருவம் விரும்புமே, கபாலமேந்து
    கையனே, மெய்யனே, கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாகனாமே
    பசுவேறுமே, பரம யோகியாமே
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரைஆர்க்கும்மே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(2)
ஏறேறி ஏழுலகும் உழிதர்வானே
    இமையவர்கள் தொழுதேத்த இருக்கின்றானே
பாறேறு படுதலையில் பலிகொள்வானே
    படஅரவம் தடமார்பில் பயில்வித்தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப்பானே
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே
ஆறேறு சடைமுடிமேல் பிறை வைத்தானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(3)
முண்டத்தில் பொலிந்திலங்கு மேனியானே
    முதலாகி நடுவாகி முடிவானானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறையானே
    கதநாகம் கொண்டாடும் காட்சியானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றியானே
    பெருநிலநீர் தீவளிஆகாசமாகி
அண்டத்துக்கப்பாலாய் இப்பாலானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(4)
செய்யனே, கரியனே கண்டம், பைங்கண்
    வெள்ளெயிற்றாடரவனே, வினைகள் போக
வெய்யனே, தண்கொன்றை மிலைத்த சென்னிச்
    சடையனே, விளங்குமழுச் சூலமேந்தும்
கையனே, காலங்கள் மூன்றானானே
    கருப்புவில் தனிக்கொடும் பூண் காமற்காய்ந்த
ஐயனே, பருத்துயர்ந்த ஆனேற்றானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(5)
பாடுமே ஒழியாமே நால் வேதம்மும்
    படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண்திங்கள்
சூடுமே, அரைதிகழத் தோலும் பாம்பும்
    சுற்றுமே, தொண்டைவாய் உமையோர் பாகம்
கூடுமே, குடமுழவம் வீணை தாளம்
    குறுநடைய சிறுபூதம் முழக்கமாக் !கூத்
தாடுமே, அந்தடக்கை அனலேந்தும்மே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(6)
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள
    உறுபிணியும் செறுபகையும், ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
    வெள்ளப் புனல்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே, ஏழுலகும் தானாகும்மே
    இயங்கும் திரிபுரங்கள் ஓரம்பினால்
அழித்திடுமே, ஆதிமா தவத்துளானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(7)
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை
    குறள்பூதம் முன்பாடத் தான்ஆடும்மே
கழலாடு திருவிரலால் கரணம் செய்து
    கனவின்கண் திருவுருவம் தான் காட் டும்மே
எழிலாரும் தோள்வீசி நடமாடும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமந்தோறும்
அழலாடுமே, அட்ட மூர்த்தியாமே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(8)
மாலாகி மதமிக்க களிறு தன்னை
    வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம்
    வெம்புலால் கைகலக்க மெய் போர்த்தானே
கோலாலம் படவரை நட்டரவு சுற்றிக்
    குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டிருண்ட கண்டத்தானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(9)
செம்பொனால் செய்தழகு பெய்தாற் போலும்
    செஞ்சடைஎம் பெருமானே, தெய்வ நாறும்
வம்பினாள் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
    மணவாளனே, வலங்கை மழுவாளனே
நம்பனே, நான்மறைகள் தொழ நின்றானே
    நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே, அண்ட கோசரத்துளானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(10)
எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்
    இளநிலாத் திகழ்கின்ற வளர் சடையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையிணை அமர்பொருது கோலம் கொண்ட
தழும்புளவே, வரைமார்பில் வெண்ணூலுண்டே
    சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திருவுருவில் வெண்ணீற்றானே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே
(11)
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
    நீண்டானே, நேரொருவர் இல்லாதானே
கொடியேறு கோலமா மணிகண்டன்னே
    கொல்வேங்கை அதளனே, கோவணவனே
பொடியேறு மேனியனே, ஐயம் வேண்டிப்
    புவலோகம் திரியுமே, புரிநூலானே
அடியாரை அமருலகம் ஆள்விக்கும்மே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page