(1)
அரவணையான் சிந்தித்தரற்றும்அடி
அருமறையான் சென்னிக்கணியாம்அடி
சரவணத்தான் கைதொழுது சாரும்அடி
சார்ந்தார்கட்கெல்லாம் சரணாம்அடி
பரவுவார் பாவம் பறைக்கும்அடி
பதினெண் கணங்களும் பாடும்அடி
திரைவிரவு தென்கெடில நாடன்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(2)
கொடுவினையார் என்றும் குறுகாஅடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்அடி
படுமுழவம் பாணி பயிற்றும்அடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தஅடி
கடுமுரண் ஏறூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையம் காப்பான் கருதும்அடி
நெடுமதியம் கண்ணி அணிந்தான்அடி
நிறைகெடில வீரட்டம் நீங்காஅடி
(3)
வைதெழுவார் காமம்பொய் போகாஅடி
வஞ்ச வலைப்பாடொன்றில்லா அடி
கைதொழுது நாமேத்திக் காணும்அடி
கணக்கு வழக்கைக் கடந்தஅடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்அடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றஅடி
தெய்வப் புனற்கெடில நாடன்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(4)
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்அடி
அழகெழுதலாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தஅடி
சோமனையும் காலனையும் காய்ந்தஅடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்அடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லஅடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(5)
ஒருகாலத்தொன்றாகி நின்றஅடி
ஊழிதோறு ஊழி உயர்ந்தஅடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்அடி
புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
இருநிலத்தார் இன்புற்றங்கேத்தும் அடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்அடி
திருவதிகைத் தென்கெடில நாடன்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(6)
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றஅடி
புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
உருவிரண்டும் ஒன்றோடொன்றொவ்வாஅடி
உருவென்றுணரப்படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(7)
உரைமாலை எல்லாம் உடையஅடி
உரையால் உணரப்படாத அடி
வரைமாதை வாடாமை வைக்கும்அடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்அடி
அரைமாத்திரையில் அடங்கும்அடி
அகலம் அளக்கிற்பார் இல்லாஅடி
கரைமாங்கலிக் கெடில நாடன்அடி
கமழ் வீரட்டானக் கபாலிஅடி
(8)
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடுவாய் உலகநாடாய அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்றஅடி
தீத்திரளாய் உள்ளே திகழ்ந்தஅடி
மறுமதியை மாசு கழுவும்அடி
மந்திரமும் தந்திரமும் ஆயஅடி
செறிகெடில நாடர் பெருமான்அடி
திருவீரட்டானத்தெம் செல்வன்அடி
(9)
அணியனவும் சேயனவும் அல்லாஅடி
அடியார்கட்காரமுதமாய அடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லஅடி
பற்றற்றார் பற்றும் பவளஅடி
மணியடி பொன்னடி மாண்பாம்அடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லஅடி
தணிபாடு தண்கெடில நாடன்அடி
தகைசார் வீரட்டத் தலைவன்அடி
(10)
அந்தாமரைப் போதலர்ந்த அடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தஅடி
முந்தாகி முன்னே முளைத்தஅடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்திஅடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்அடி
பவளத் தடவரையே போல்வான் அடி
வெந்தார் சுடலைநீறாடும்அடி
வீரட்டங்காதல் விமலன்அடி
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...