திருவதிகை – அப்பர் தேவாரம் (1):

<– திருவதிகை

(1)
கூற்றாயினவாறு விலக்ககிலீர், கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(2)
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது ஒப்பது கண்டறியேன், வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்தும் கரந்தும் இடீர்
அஞ்சேலும் என்னீர், அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(3)
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர், படுவெண்தலையில் பலி கொண்டுழல்வீர்
துணிந்தே உமக்காட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய்பூச வல்லீர், பெற்றம் ஏற்றுகந்தீர், சுற்றும் வெண்தலைகொண்டு
அணிந்தீர், அடிகேள் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(4)
முன்னம் அடியேன் அறியாமையினால், முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்காளும் பட்டேன், சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்ன நடையார் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(5)
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
வார்த்தைஇது ஒப்பது கேட்டறியேன், வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் புனலார் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(6)
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடுஇசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய், உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(7)
உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும், ஒருவர் தலைகாவல் இலாமையினால்
வயந்தே உமக்காட் செய்து வாழலுற்றால், வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே, பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(8)
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன், வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச் சங்க வெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே, கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(9)
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர், புரிபுன் சடையீர், மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மைஇனித் தெளியார், அடியார் படுவது இதுவேயாகில்
அன்பே அமையும் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே
(10)
போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரிதோல், புறங்காடு அரங்கா நடமாட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன் தனை, மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page